சீனாவில் இருக்கும் கிருத்துவ திருச்சபைகள் அனைத்தையும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் திருச்சபைகளுக்கு மாற்றப் போவதாக நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி. இது குறித்து போப் பிரான்சிஸ் சீனாவுடன் பேச்சு வார்த்தை.
சீனாவில் இருக்கும் 12 மில்லியன் கிருத்துவர்களில் பாதி நபர்கள் வாடிகன் தலைமை சொல்லும் மார்க்கத்தினையும், மீத நபர்கள் சீனாவின் தேசியவாதக் கொள்கைகளுடன் கூடிய கத்தோலிக்க திருச்சபையினையும் பின்பற்றி வருகின்றார்கள். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போப் பிரான்சிஸ் சீனாவுடன் நடந்த பேச்சு வார்த்தை சிறப்பாக நடைபெற்றது என்று கூறியுள்ளார்.
”சீனாவுடனான பேச்சு வார்த்தையை தொடங்குவது கொஞ்சம் சிரமமான காரியமாக இருப்பினும், பேச்சு வார்த்தை நடத்துவதால் நிகழப்போகும் நன்மையினை கருத்தில் கொண்டு தான் பேச்சு வார்த்தைக்கு தயாரானோம்” என்று குறிப்பிட்டுள்ளார். சீன மக்கள் அனைவருமே அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதி பெற்றவர்கள் தான். அவர்களுக்கு பொறுமையின் அர்த்தம் என்னவென்று தெரிந்திருக்கின்றது. மிகுந்த அறிவுக் கூர்மையுடன் கூடிய அம்மக்களின் மேல் நான் எப்போதும் அதிக அளவு மரியாதை வைத்திருக்கின்றேன் என்று உருகினார் போப் பிரான்சிஸ்.
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரான கெங் சுவாங் இது குறித்து பேசும் போது, வாடிகன் நாட்டுனான உறவினை மேம்படுத்த எங்களால் இயன்ற அளவு முயற்சிகள் மேற்கொள்வோம். வாடிகன் பகுதியில் இருந்து வரும் கருத்துகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இரு தரப்பிலும் சுமூகமான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதையே இரு தரப்பினரும் விரும்புகின்றோம் என்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இது குறித்து 86 வயதான ஹாங் காங் தலைமை பிஷப் கார்டினல் ஜோசப் ஜென் தெரிவிக்கையில், “வாடிகன் தலைமையில் இயங்கும் அனைத்து தேவாலயங்களையும் சீனாவின் கம்யூனிஸ்ட் தலைமையில் இயங்கும் அமைப்பிற்கு விற்பதற்கான ஆயத்தப் பணிகளை வாடிகன் செய்து வருகின்றது. எனவே இப்பேச்சுவார்த்தை மக்களை ஏமாற்றும் ஒன்றாகக் கூட இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.