அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வெற்றியை டொனால்டு டிரம்ப் ஏற்க மறுத்து விட்டார். மற்றும் ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் தரப்பு பல்வேறு மாகாணங்களில் வழக்குகள் தொடர்ந்தார்கள். ஆனால் அவை அந்த மாகாண நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் ஜனவரி 6-ம் தேதி தேர்தல் வெற்றிச் சான்றிதழை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் பரிசீலனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் கழித்து இந்த போராட்டம் கட்டுக்குள் கொண்டுப் வரப்பட்டது. உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்திருந்தன. இதையடுத்து ஜோ பைடனின் வெற்றியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்தனர். அதோடு திட்டமிட்டபடியே ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவி ஏற்க உள்ளனர்.
" ஜனவரி 20ஆம் தேதி புதிய நிர்வாகம் பொறுப்பேற்க உள்ளது. எனவே அமைதியான, சுமூகமான அதிகார பரிமாற்றம் இருக்கும்" என முன்னதாக ஒரு வீடியோ பதிவில் ட்ரம்ப் கூறியிருந்தார்.
ஆனால் வன்முறை நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு, "என்னிடம் கேட்ட அனைவருக்கும், நான் ஜனவரி 20 அன்று பதவியேற்புக்கு செல்லமாட்டேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
இதற்கு முன்னதாக 1869-ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக இருந்த ஆண்ட்ரூ ஜான்சன், அடுத்ததாக பதவியேற்கவிருந்த யுலிசஸ் எஸ்.கிராண்ட்டின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆண்ட்ரூ ஜான்சனுக்கு பிறகு பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்கும் முதல் அதிபராக டொனல் டிரம்ப் இருப்பார் என கூறப்படுகின்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"