ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மக்கள் தொகை முக்கிய பங்காற்றுகிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளைக் கண்டு உலகின் பிற நாடுகள் அச்சம் கொள்வதற்கு மிக முக்கிய காரணம் இந்நாடுகளில் உள்ள அதிகப்படியான மக்கள் தொகை தான். ராணுவம் போன்ற மனித வளம் தேவைப்படும் துறைகளுக்கு அதிக மக்கள் தொகை இருப்பது அவசியம். மக்கள் தொகை குறைந்து வரும் நாடுகள், ராணுவம் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு கூட ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அந்த வகையில் ரஷ்யா கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.
ரஷ்யா நடத்தும் உக்ரைன் போருக்கு வீரர்களே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் நிலைமை மோசமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில், 1990 ஆம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டு மக்களை அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசே அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பணிபுரியும் இடத்தில் இடைவேளையின்போது உடலுறவு கொள்ளுமாறு அந்நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்கும் முயற்சியில் பணியில் இருப்பவர்கள் தங்கள் மதிய உணவு மற்றும் காபி இடைவேளையின் போது கூட உடலுறவு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். “ரஷ்ய மக்களைப் பாதுகாப்பதே எங்கள் மிக உயர்ந்த தேசிய முன்னுரிமை. ரஷ்யாவின் தலைவிதி, நம்மில் எத்தனை பேர் இருப்போம் என்பதைப் பொறுத்தது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.
புதினைப் போலவே, ரஷ்ய சுகாதார அமைச்சர் டாக்டர் யெவ்ஜெனி ஷெஸ்டோபலோவ், "மக்கள்தொகையை வளர்த்தெடுப்பது முக்கியமானது. இதற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது. குடும்ப விரிவாக்கத்திற்கு மதிய உணவு மற்றும் காபி இடைவேளையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வேலையில் மிகவும் பிஸியாக இருப்பதால் குழந்தையைத் தள்ளிப்போடுகிறோம் எனச் சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது.
வேலை செய்யும்போது இடைவெளியில்கூட இதை நீங்கள் செய்யலாம். இதை எல்லாம் தள்ளிப் போடக்கூடாது. வாழ்க்கை மிக விரைவாகச் செல்லும் ஒன்று. எனவே நாம் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பிரேக் நேரத்தைப் பயன்படுத்தி குழந்தைகளை உருவாக்குங்கள்" என்று கூறியுள்ளார்.
ரஷ்ய அரசு, இப்படி கூறியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.5 குழந்தைகளாகக் குறைந்துள்ளதால், இது மக்கள்தொகை நிலைத்தன்மையை உறுதிப்படுத்தத் தேவையான 2.1 விகிதத்தை விட மிகக் குறைவாக இருப்பதால் இதனை அரசே பரிந்துரை செய்துள்ளது. மேலும், ரஷ்யாவின் மக்கள்தொகை தற்போதைய 144 மில்லியனில் இருந்து 2050 ஆம் ஆண்டில் சுமார் 130 மில்லியனாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.