திங்களன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் உரையாடிய பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுடன் இணைந்து அமைதி ஒப்பந்தம் தொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டார்.
மேலும் உக்ரைனுடனான போரை முடிப்பதற்கான முயற்சிகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
ட்ரம்புக்கு நன்றி தெரிவித்த புதின், கடந்த வாரம் துருக்கியில் இரு போர் நாடுகளும் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தியதால், மாஸ்கோ மற்றும் கீவ் இடையே நேரடி பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க அமெரிக்க அதிபர் காரணமாக இருந்தார் என்று குறிப்பிட்டார். இது மார்ச் 2022 க்குப் பின்னர் நடந்த முதல் நேரடி சந்திப்பு ஆகும்.
ஆனால் திங்களன்று ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய பின்னர், முயற்சிகள் "பொதுவாக சரியான பாதையில்" இருப்பதாக புடின் கூறினார்.
கருங்கடல் ரிசார்ட் சோச்சிக்கு அருகே ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் புடின், "அமெரிக்க அதிபருடன் நாங்கள் உடன்பட்டுள்ளோம். ரஷ்யா முன்வைக்கும், மேலும் எதிர்கால சாத்தியமான அமைதி உடன்படிக்கை குறித்து உக்ரைன் தரப்புடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது," என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ரஷ்யாவும் உக்ரைனும் சாத்தியமான போர் நிறுத்தம் மற்றும் அதற்கான காலக்கெடுவை வரையறுக்க வேண்டியிருக்கும் என்று புடின் கூறினார். உக்ரைன், அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா ஆகியவை 30 நாள் நிபந்தனையற்ற மற்றும் உடனடி போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ளுமாறு புடினை வலியுறுத்தியுள்ளன. மேலும் இப்பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் விரோதப் போக்கை நிறுத்தவும் அவை கோரிக்கை வைத்துள்ளன.
"ஒட்டுமொத்தமாக, ரஷ்யாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இந்த நெருக்கடியின் மூல காரணங்களை அகற்றுவதுதான் எங்களுக்கு முக்கியமானது. அமைதியை நோக்கிச் செல்வதற்கான மிகவும் பயனுள்ள வழிகளை நாம் தீர்மானிக்க வேண்டும்" என்று புதின் மேலும் கூறினார்.
புடினுடன் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் பேசிய பின்னர், ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ட்ரூத் சோஷியல் பதிவில், ரஷ்ய அதிபருடனான உரையாடல் "மிகவும் நன்றாக இருந்தது" என்றும், உடனடி போர் நிறுத்தம் மற்றும் மூன்று ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் இப்போது தொடங்கும் என்றும் டிரம்ப் கூறினார்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் தான் பேசியதாக அமெரிக்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
உக்ரைனுடனான போரை ரஷ்யாவின் மேற்கத்திய உறவில் ஒரு திருப்புமுனையாகக் கருதும் புடின், 1991 இல் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது மேற்கு, மாஸ்கோவை அவமானப்படுத்தியதாகவும், நேட்டோவை விரிவாக்குவதன் மூலம், அமெரிக்க தலைமையிலான கூட்டணி, உக்ரைன் உட்பட மாஸ்கோவின் செல்வாக்கு மண்டலம் என்று புடின் கருதுவதை ஆக்கிரமிப்பதாகவும் நம்புகிறார்.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ், உக்ரைனுடனான போர்நிறுத்த முன்மொழிவுக்கு புதின் மற்றும் டிரம்ப் எந்த குறிப்பிட்ட காலக்கெடுவையும் விவாதிக்கவில்லை என்று கூறினார். ஆனால் ஒன்பது ரஷ்யர்களை ஒன்பது அமெரிக்கர்களுக்கு பரிமாறிக்கொள்ளும் சாத்தியமான கைதிகள் பரிமாற்றம் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். மாஸ்கோ மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான உறவுகளின் வாய்ப்புகள் "மிகவும் சிறப்பாக உள்ளது" என்று டிரம்ப் கூறியதாக கிரெம்ளின் உதவியாளர் மேலும் கூறினார்.
Read in English: ‘Russia ready to work with Ukraine on peace accord’: Putin after 2-hour call with Trump