பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்டோபர் 14ம் தேதி வரை முடக்கி வைக்க இங்கிலாந்து ராணி எலிசெபத் அனுமதி அளித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. எனவே 'பிரெக்சிட்' மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. ஆனால் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதைத் தொடர்ந்து, புதிதாக பிரதமராக பொறுப்பேற்ற போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசுக்கு பிரெக்சிட் விவகாரத்தில் கெடு விதிக்கப்பட்டது. வரும் அக்டோபர் 31-ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதி என புதிய பிரதமர் போரிஸ் அறிவித்திருந்தார். மேலும், நாடாளுமன்றத்தை முடக்கவும் பரிந்துரை செய்திருந்தார். அதுவரை பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ஒப்புதல் அளிக்க கோரி ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து அக்டோபர் 14ம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் பிரதமரின் உத்தரவுக்கு ராணி ஒப்புதல் அளித்துள்ளார் என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.