ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (வயது 96) உடல் நலக்குறைவால் செப்டம்பர் 8ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது உடல் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலாயத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்திய சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றனர்.
முன்னதாக, ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இருந்து பீரங்கி வண்டியில் ஏற்றிக் கொண்டு வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கு கூட்டத்தில், உலகம் முழுவதிலும் இருந்து 2,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அனைத்தும் அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ வலையொளி (யூடியூப்) பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது சகோதரர்கள், சகோதரி, மகன்கள் ஆகியோர் ராணுவ வீரர்களுடன் அணிவகுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து ராணியின் இறுதி ஊர்வலம் அந்நாட்டின் தேசிய கீதம் இசைப்பதோடு நிறைவு பெறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil