நடப்பாண்டின் ஜூலை 7ஆம் தேதி, பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஜாலியான பிறந்தநாள் பார்ட்டி, தொடர் பாலியல் கிசுகிசு என ஜான்சன் சிக்கியதே இதற்கு காரணம்.
சொந்தக் கட்சியிலேயே போரிஸ் ஜான்சனுக்கு எதிர்ப்பு எழுந்தது. இந்திய வம்சாவழியினரான ரிஷி சுனக் உள்ளிட்ட சொந்த கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சர்களே தொடர்ச்சியாக ராஜினாமா செய்தனர்.
ஒருகட்டத்தில் நெருக்கடி அளவுக்கு அதிகமாக முற்றவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தப் போட்டியில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக், உள்பட 8 பேர் போட்டியிட்டனர்.
நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் ரிஷி சுனக் மற்றும் லிட் ட்ரஸ் ஆகியோர் இறுதி யுத்தத்துக்கு தேர்வானார்கள். இருவரும் நேரடி பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்தப் போட்டியில் கன்சர்வேட்டிவ் கட்சியில் லிட் ட்ரஸ்க்கு ஆதரவு அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் செப்.5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. , ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரிஷி சுனக் 60,399 வாக்குகளைப் பெற்ற நிலையில், லிஸ் ட்ரஸ் 81,326 வாக்குகளைப் பெற்று அவரை வீழ்த்தினார். கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து பிரதமராகும் நான்காவது தலைவர் லிஸ் ட்ரஸ் ஆவர்.
ரிஷி சுனக் பிரதமர் ஆகியிருந்தால் அது வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்பட்டிருக்கும். இங்கிலாந்தின் முதல் ஆசியப் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்திருப்பார்.
ரிஷி சுனக்கின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த ஆசியப் பெண்மணி ஒருவர், “இதற்கு ரிஷியின் தோல் ஒரு காரணமாக இருக்கலாம்” என்றார்.
லிஸ் ட்ரஸ் நாளை (செவ்வாய்க்கிழமை) இங்கிலாந்து ராணியை சந்தித்த பின், பிரதமராக பதவியேற்பார் என்று அறி்விக்கப்பட்டுள்ளது.
2019 பொதுத் தேர்தல், ஜான்சனை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்குக் கொண்டு வந்தது. இது பல கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil