அண்டை தீவு நாடான இலங்கையின் இடைக்கால புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே வெள்ளிக்கிழமை (ஜூலை15) பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
அப்போது அதிபருக்கு வழங்கப்பட்ட மாண்புமிகு மற்றும் தனிக்கொடி அந்தஸ்தை ரத்து செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து, இனி அதிபருக்கும் ஒரே இலங்கை கொடிதான் பயன்படுத்தப்படும் என்றார்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அதிபருக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக போராடிவருகின்றனர்.
இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையில் இருந்து மாலத்தீவு, சிங்கப்பூர் என வெளிநாடு தப்பிஓடிவிட்டார்.
இதற்கிடையில், அவரது மூத்த சகோதரரான மகிந்தா ராஜபக்ச மற்றும் அவரது மகன் ஆகியோர் நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுத்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு மத்தியில் நாட்டின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக அதிபர் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக இலங்கையில் போராட்டம் வெடித்தபோதும், ராஜபக்ச வீடு தீக்கிரையாக்கப்பட்டபோதும் போராட்டக்காரர்களை பாசிஸ்டுகள் என ரணில் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் அதிபர் பதவி மீதான போராட்டக்காரர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் இந்த இரு நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக கோத்தபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலமாக சபாநாயகருக்கு அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து, புதிய இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இலங்கை புதிய அதிபரை தேர்ந்தெடுக்க ஜூலை 19ஆம் தேதி மனுக்கள் அளிக்கப்படவுள்ளன. தொடர்ந்து, 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.