இலங்கை அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அண்டை தீவு நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, மக்கள் தன்னெழுச்சி போராட்டம் காரணமாக அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகிறது.
இந்த நிலையில் அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக இலங்கை மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர், ஒருகட்டத்தில் அதிபர் மாளிகை போராட்டக்காரர்கள் வசமானது.
இதற்கிடையில் சூட்கேசுடன் கப்பலில் குடும்பத்தினருடன் தப்பித்து மாலத்தீவு சென்றார் அதிபர் கோத்தபய ராஜபக்ச. தொடர்ந்து, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.
தற்போது சிங்கப்பூரில் இருக்கும் கோத்தபய ராஜபக்ச அங்கிருந்தபடி மின்னஞ்சலில் ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். இதையடுத்து இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார்.
இவர் இலங்கையின் பிரதமராக 5 முறை பதவி வகித்தார். இந்தச் சூழலில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு இன்று (ஜூலை 20) நடைபெற்றது.
இலங்கை அதிபர் தேர்தலில் தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெருமா மற்றும் இடதுசாரி மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுகுமார திஸாநாஙக்க ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளது என்ற தகவல் வெளியானது.
அந்தத் தகவலை மெய்ப்பிக்கும் வகையில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 முறை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே முதன் முறையாக இலங்கையின் அதிகாரப்பூர்வ அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.