scorecardresearch

இலங்கை அதிபரானார் ரணில் விக்கிரமசிங்கே; அரசியல் தந்திரவாதி உயர் பதவிக்கு வந்த கதை

இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரணில் விக்கிரமசிங்கே; பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி 6 முறை பிரதமராக பதவி வகித்த வழக்கறிஞருக்கு கிடைத்த உயர் பதவி

Ranil Wickremesinghe, a wily political survivor, elected Sri Lanka’s president: இலங்கையின் பிரதமராக 6 முறை பதவி வகித்த வழக்கறிஞரான ரணில் விக்ரமசிங்கே, தனது வேட்புமனுவுக்கு இலங்கை மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி புதன்கிழமை பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஜனாதிபதி பதவியை உறுதிசெய்து, இறுதியாக உயர் பதவிக்கு வந்துள்ளார்.

“இந்த மரியாதைக்காக நான் பாராளுமன்றத்திற்கு நன்றி கூறுகிறேன்,” என்று 73 வயதான ரணில் விக்கிரமசிங்கே தனது வெற்றியை சட்டமன்றத்தின் பொதுச் செயலாளர் அறிவித்த பிறகு கூறினார். 225 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் ரணில் 134 வாக்குகளைப் பெற்றநிலையில், அவரது பிரதான போட்டியாளரான ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டல்லஸ் அழகப்பெரும 82 வாக்குகளைப் பெற்றார்.

ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பாதை குறிப்பிடத்தக்கது. அவர் இதற்கு முன்னர் இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்று இருந்தார். ஆனால் இந்த முறை ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவராக மட்டுமே இருந்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே போதுமான வாக்குகளைப் பெற்றார்.

அரசாங்க உயர் பதவிகளில் அவருக்கு இருந்த அனுபவம் மற்றும் “நரி” என்ற புனைப்பெயரைப் பெற்றுத்தந்த ஒரு புத்திசாலித்தனமான செயற்பாட்டாளர் என்ற நற்பெயரும், இலங்கையின் அழிவுகரமான பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரு வழியைத் தேடும் போது அவருக்கு சாதகமாக கருதப்பட வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கே சமீபத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், மேலும் இந்தியா உள்ளிட்ட முக்கிய நன்கொடை நாடுகளுடன் பணிபுரியும் உறவை அனுபவித்து வருகிறார்.

முந்தைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்த பொதுமக்கள் எதிர்ப்புகளை ரணில் விக்கிரமசிங்கேவால் அடக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த மாத தொடக்கத்தில் லட்சக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி, உயர்ந்து வரும் பணவீக்கம், எரிபொருள் மற்றும் பிற முக்கியப் பொருட்களின் பற்றாக்குறை, வழக்கமான மின்வெட்டு மற்றும் ஆளும் உயரடுக்கு மத்தியில் ஊழல் என்று பொதுமக்கள் கருதுவது போன்றவற்றின் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

அவர்களின் கோபத்தின் மையமானது நெருக்கடிக்கு முன்னர் நாட்டை விட்டு சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற நாட்டின் மிக சக்திவாய்ந்த அரசியல் வம்சத்தின் உறுப்பினரான கோத்தபய ராஜபக்சே மீது இருந்தது. பொதுமக்கள் ரணில் விக்கிரமசிங்கேவையும் பதவி விலகுமாறு கோரினர். ஆனால் அவர் செய்ய மறுத்துவிட்டார்.

ராஜபக்சே குடும்பத்தின் ஆதிக்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியில் உள்ள பலரின் ஆதரவைப் பெற்ற பின்னர், பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்சேவின் வெற்றி கிடைத்தது.

முன்னாள் ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சே, அரசாங்கத்திற்கு ஆதரவான மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையிலான மோதல்களைத் தொடர்ந்து, ஒரு கொடிய வன்முறை அலையைத் தூண்டியதைத் தொடர்ந்து, பதவியில் இருந்து விலகிய பின்னர், மே மாதம் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகப் பொறுப்பேற்றார்.

அப்போதிருந்து, ரணில் விக்கிரமசிங்கே IMF உடன் $3 பில்லியன் வரையிலான சாத்தியமான பிணை எடுப்பு தொகுப்புக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார், இது தவிர அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் பணியாற்றினார்.

“இது ஒரு பொருளாதார நெருக்கடியே தவிர அரசியல் நெருக்கடி அல்ல” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். “பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்கும் அனுபவமும், அறிவும், ஆற்றலும் கொண்ட ஒரே நபர் ரணில் விக்கிரமசிங்கே என்று நாங்கள் உணர்கிறோம்.”

ஜனாதிபதியாக, 2024ல் முடிவடைய இருந்த கோத்தபய ராஜபக்சேவின் பதவிக்காலத்தை ரணில் விக்கிரமசிங்கே முடிக்க உள்ளார்.

‘அரசியல் ஒரு ரத்த விளையாட்டு’

ஊடகத்துறையில் பெரும் ஆர்வம் கொண்ட, அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களின் முக்கிய குடும்பத்தில் பிறந்த 29 வயதான ரணில் விக்கிரமசிங்க, 1978 ஆம் ஆண்டு அவரது மாமா ஜனாதிபதி ஜூனியஸ் ஜெயவர்த்தனவினால் நாட்டின் இளைய கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1994 இல், அவரது மூத்த சகாக்கள் பலரை அழித்த படுகொலைகளைத் தொடர்ந்து, விக்கிரமசிங்கே யூ.என்.பி.யின் தலைவராக ஆனார்.

ராஜபக்சேக்களைப் போல் அல்லாமல், செல்வம் மிக்க நகர்ப்புற வாக்காளர்களைத் தாண்டி அவருக்கு சிறிய ஆதரவே உள்ளது. ஆனாலும், அது அவரை மீண்டும் மீண்டும் பிரதமர் பதவிக்கான வழியைக் கண்டுபிடிப்பதைத் தடுக்கவில்லை.

ஜூலை 9 அன்று, மத்திய கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டதால், அவரது தனிப்பட்ட இல்லத்தின் ஒரு பகுதியை தீயிட்டுக் கொளுத்தியதால், தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.

ஒரு பொருளாதார தாராளவாதி, தனது முந்தைய பதவிக்காலத்தில் இருந்து IMF உடன் கையாள்வதில் அனுபவம் உள்ளவரான ரணில் விக்கிரமசிங்கே, இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு தேசமான இலங்கை மீது செல்வாக்கு செலுத்துவதற்காக நீண்டகாலமாகத் துடித்துள்ள ஆசிய ராட்சதர்களான சீனா மற்றும் இந்தியாவுடனும் உறவுகளைக் கட்டியெழுப்பியுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட ராஜபக்சே குடும்பத்திற்கு எதிரான பல விசாரணைகளை அவர் தடுத்து நிறுத்தியதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கே கட்சித் தலைமையை விட்டுக்கொடுக்க மறுத்ததால், ஆரம்பிக்கப்பட்ட சமகி ஜன பலவேகய (SJB)  கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதிப் போட்டியாளராக இருந்தார்.

செவ்வாய்கிழமை பாராளுமன்றம் கூடி இப்பதவிக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் போது, ​​சஜித் பிரேமதாச திடீரென போட்டியில் இருந்து விலகி, அழகப்பெருமவை ஆதரிப்பதாக அறிவித்தார். இறுதியில் வாக்குகளை திருப்ப இது போதவில்லை.

“அரசியல் என்பது சதுரங்கத்தை விட மேலானது” என்று 2014 இல் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ரணில் விக்கிரமசிங்கே கூறினார். மேலும், “இது கிரிக்கெட் போன்ற குழுப்பணி. ஒரு மாரத்தானுக்கு ஏற்ற உடற்தகுதியுடன் இருப்பதுபோல் நீங்கள் இருக்க வேண்டும். இது ரக்கர் போன்ற கடினமான விளையாட்டு மற்றும் குத்துச்சண்டை போன்ற இரத்த விளையாட்டு.” என்றும் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Ranil wickremesinghe sri lanka new president