இலங்கைக்கு பிரதமாராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ரணில் விக்ரம சிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். இதையடுத்து, ராஜபக்சே வெள்ளிக்கிழமை மாலை இலங்கை பிரதமராக பதவியேற்றார்.
Mahinda Rajapaksa : இலங்கை அரசியலில் திடீர் மாற்றம்... பிரதமரானார் மகிந்த ராஜபக்சே
ஆனால் இந்த பதவியேற்பு விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், சிரிசேனாவிற்கு என்னை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் இல்லை என்றும் ரணில் விக்ரம சிங்கே கண்டனம் தெரிவித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அங்கு யார் பிரதமர் என்ற குழப்பம் உருவாகி உள்ளது.
ரணில் விக்ரமசிங்கே இலங்கை பிரதமராக நீடிப்பார் : சபாநாயகர்
இந்நிலையில் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்றும் ராஜபக்சே பதவி ஏற்பை ஏற்றுக் கொள்ள முடியாது இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும் ராஜபக்சே உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். அவருக்கு எத்தனை எம்பிக்கள் பலம் உள்ளது என்று நிரூபிக்க வேண்டும். ராஜபக்சே தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே அவரது பதவி ஏற்பை ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.
நேற்று ராஜபக்சேவிற்கு பிரதமருக்கான அதிகாரம் அனைத்தும் வழங்கப்படுகிறது என்று அதிபர் சிறிசேனா கூறினார். இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்குத்தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது என்றும் முடிவெடுக்கும் அதிகாரம், உரிமை அவருக்குத்தான் உள்ளது என்று சபாநாயகர் பரபரப்பாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ராஜபக்சே இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் சபாநாயகரின் புதிய அறிவிப்பால் இலங்கையின் பிரதமர் யார் என்று பெரிய குழப்பம் நீடித்து வருகிறது.