ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான முக்கிய கடல் வர்த்தக பாதையாக சூயஸ் கால்வாய் இருந்து வருகிறது.
கடந்த, மார்ச் 23ம் தேதி அன்று ஜப்பானைச் சேர்ந்த ஷோய் கிசனுக்குச் சொந்தமானதுமான, தைவானின் எவர்கிரீன் நிறுவனம் இயக்கும் உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான ‘எவர் கிவ்ன்’ சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டது.. இக்கப்பல் 400 மீட்டர் நீளமும், சமார் 200,000 டன் எடையும் கொண்டது.
கப்பலானது, ’வலுவான காற்று ’ மற்றும் ‘மணல் புயல்’ காரணமாக சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கி கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையான காரணங்களை கண்டறிய விசாரனை நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வாரமாக கப்பலை மீட்கும் முயற்சி நடைபெற்று வந்தது. சனிக்கிழமை வரை பதினொரு இழுவை கப்பல்கள் எவர் கிவ்னை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டன. இத்தாலி மற்றும் நெதர்லாந்தில் இருந்து மேலும் இரு இழுவைக்கப்பல்கள் எவர் கிவ்னை மீட்கும் முயற்சியில் சேர்ந்தன. இதனை மீட்கும் முயற்சியானது ஆறு நாட்களுக்கு பிறகு இன்று வெற்றி கண்டுள்ளது.
ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான முக்கிய கடல் வர்த்தக பாதையை, இந்த மிகப் பெரிய கப்பல் அடைத்துக்கொண்டதால், சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுடன் சுமார் 300 கப்பல்கள் அடைப்பின் இருபுறம் சிக்கி தவிக்கின்றன.
உலகளாவிய கடல் வர்த்தகத்தின் முக்கிய பாதை அடைப்புக்குள்ளானதால், கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படும் என்றும் ஒரு வேளை சேனல் திறக்கப்படாவிட்டால் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி செல்ல 7-8 நாட்கள் கூடுதல் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது கப்பல் நிறுவனங்களுக்கு பெரிதும் செலவு வைக்க கூடியது.
தற்போது, கப்பல் மீட்கப்பட்டு, பாதை சரியாகி வருவதால் சூயஸ் கால்வாய் வழியான கடல் வர்த்தக நிலைமை சீராகும் என்று தெரிகிறது.
முன்னதாக, எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவ்ன் என்ற சரக்கு கப்பலில் உள்ள 25 இந்திய பணியாளர்கள் பற்றிய கேள்வி எழுந்தது, இதனையடுத்து பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் நல்ல உடல் நலத்துடனும் உற்சாகத்துடனும் உள்ளனர் என்று பெர்ன்ஹார்ட்ஷூல்ட் மேனேஜ்மெண்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும் அவர்கள் அனைவரும் கப்பலை மீட்டு மீண்டும் மிதக்க வைக்க பணியாற்றி வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.
எனவே, கப்பலில் உள்ள இந்திய குழுவினர் அனைவரும் பாதுக்கப்பாக இருப்பதால், இந்திய கப்பல் இயக்குநரகம் இதில் தலையிடவில்லை என்று அதன் இயக்குனர் அமிதாப் குமார் கூறியிருந்தார். மேலும் இதன் பாதிப்பு வர்த்தகரீதியிலானது என்றும் கூறியிருந்தார்