இளவரசி டயனாவை நான்தான் கொன்றேன் : உளவுத்துறை ஒற்றன் மரண வாக்குமூலம்

அரசு ரகசியங்களை வெளியிட்டதாக என் மீது குற்றம் சாட்டப்படலாம். உலகத்தை விட்டு போக தயாராகி விட்டவன் ஜெயிலுக்கு போகவா பயப்பட போகிறேன்?

By: Updated: June 23, 2017, 05:28:59 PM

என் பெயர் ஜான் ஹாப்கின்ஸ். 80 வயது. இங்கே லண்டன் ஆஸ்பிடலில்தான் இருந்தேன். நேற்று டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.

நீ இருக்கப் போவது இன்னும் ஒரு சில நாட்கள்தான். அதை நிம்மதியாக உறவினர்கள், நண்பர்களோடு செலவிடு என்று சொல்லி அனுப்பினார்கள்.

வாழ்க்கை முடிவுக்கு வருவது தெரிந்து விட்டது. மனதை அழுத்திக் கொண்டிருக்கும் சில ரகசியங்களை வெளியே எடுத்துப் போட தோன்றியது.

Mi5
எம்ஐ5 என்று சுருக்கமாக சொல்லப்படும் பிரிட்டிஷ் மிலிட்டரி இன்டலிஜென்ஸ் பீரோவில் ஒற்றன் வேலை பார்த்தேன். 38 ஆண்டுகள்.

உலகம் முழுவதும் உளவு பார்ப்பதுதான் எம்ஐ5 அமைப்பின் அடிப்படை பணி. ஒவ்வொரு ஒற்றனுக்கும் பல வேலைகளில் பயிற்சி தருவார்கள். அப்படி நான் மெக்கானிகல் இன்ஜினியராகவும் ஆயுதங்கள் நிபுணராகவும் பயிற்சி பெற்றேன். எந்த ஆயுதத்தையும் எந்திரத்தையும் என்னால் கையாள முடியும்.

ஆனால் என்னை ஒரு கொலைகாரனாக எம்ஐ5 பயன்படுத்திக் கொண்டது. அசாசின், கில்லர் என்பதைவிட ஹிட்மேனாக என்று சொல்ல விரும்புகிறேன். வழக்கமான முறையில் சுட்டுக் கொல்வது, குண்டு வைப்பது எனக்கு பிடிக்காது. கெமிக்கல்கள், கண்டு பிடிக்க முடியாத விஷம் மூலம் கொலை செய்ய எனக்கு பயிற்சி அளித்தார்கள். கொலையை விபத்து போல செட்டப் செய்வது எனக்கு கைவந்த கலை.

என்னைப் போல எம்ஐ5 அமைப்பில் அப்போது ஏழு ஹிட்மென் ஒற்றர்கள் இருந்தோம். யுனைட்டட் கிங்டம் (இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து) முழுவதிலும் நாங்கள் செயல்பட்டோம். அப்போது எம் ஐ5 என்ன செய்கிறது என்று யாரும் கூர்ந்து கவனிப்பது இலை. அரசு அப்படி யாரையும் அனுமதிக்காது.

நாட்டின் உள் பாதுகாப்புக்கு இன்னின்ன ஆட்களால் ஆபத்து நேரலாம் என்று யாரையெல்லாம் எம்ஐ5 சந்தேகிக்கிறதோ, அந்த நபர்களின் பட்டியலை தயாரிப்பார்கள். அந்த லிஸ்டில் இருந்து எங்களுக்கு பெயர்களை பிரித்து வினியோகம் செய்வார்கள்.

லிஸ்டில் இடம் பிடிப்பவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள், போராட்டவாதிகள், ஊடகர்கள், தொழிற்சங்க தலைவர்களாக இருப்பார்கள்.

அப்படி 1973 ஜூன் தொடங்கி 1999 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நாங்கள் 23 கொலைகளை கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறோம்.

நான் கொலை செய்தவர்களில் முக்கியமானவர் இளவரசி டயானா. நான் கொலை செய்த ஒரே பெண்மணி அவர்தான். அரச குடும்பத்தை சேர்ந்த ஒரே நபரும் அவர்தான். அது மட்டுமல்ல. அரச குடும்பத்தாலேயே கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரே நபரும் டயானாதான்.

உலகமே நேசிக்கும் இளவரசியை கொலை செய்யச் சொல்லி எனக்கு உத்தரவு வந்தபோது ஆடிப் போனேன். என்னால் உடனே ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. இயற்கை வஞ்சகம் இல்லாமல் வாரிக் கொடுத்த அற்புதமான அழகுப் பெட்ட்கம் மட்டுமல்ல டயானா. அவர் ஓர் இரக்கம் மிகுந்த பெண்மணி. எல்லோருக்கும் ஏதாவது நல்லது செய்ய விரும்பிய இளம் பெண். அந்தப் பேரழகியின் வாழ்க்கையை சட்டென ஒரு மரக்கிளை போல முறித்துப் போட எனக்கு மனம் வரவில்லை.

என் தடுமாற்றத்தைக் கண்ட மேலதிகாரிகள், இளவரசி ஏன் கொல்லப்பட வேண்டும் என்பதை விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.

நடுத்தர குடும்ப பின்னணியில் இருந்து நாட்டை ஆளும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்த டயானாவுக்கு அரச குடும்பத்தில் நடப்பது எதுவும் சுத்தமாக பிடிக்கவில்லை. தன்னை ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே அவர்கள் கையாள விரும்பியதை டயானா சுலபமாக புரிந்து கொண்டார். அரச குடும்பத்தினர் அனைவரின் மீதும் அவருக்கு தாங்க முடியாத கடுப்பு இருந்தது.

அதே சமயம் அரண்மனை ரகசியங்கள் அனைத்தும் டயானாவுக்கு தெரிந்திருந்தன. சரியான தருணத்தில் அந்த ரகசியங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்த அவர் தயாராக இருந்தார். அது சீக்கிரமே நடந்துவிடும் போல தெரிந்தது. அப்படி ரகசியங்கள் அம்பலமாகி இருந்தால் யுனைட்டட் கிங்டம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கும். ஆயிரம் ஆண்டுகளை கடந்த அரச வம்சத்தின் கதையே அதோடு முடிந்து போயிருக்கும். ஆகவே அதற்கு முன் இளவரசியின் கதையை முடித்தாக வேண்டும் என பாஸ் என்னிடம் சொன்னார்.

இளவரசர் பிலிப் (எலிசபெத் மகாராணியின் கணவர்) நேரில் இந்த உத்தரவை தனக்கு பிறப்பித்ததாக எனது பாஸ் தெரிவித்தார்.

டயானா கொலையை ஒரு விபத்து போல சித்தரிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

அதற்கு முன் ஒரு பெண்ணை நான் கொலை செய்தது கிடையாது. அதுவும் என் மனதை உறுத்தியது. ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. எங்கள் மகாராணிக்காகவும் இந்த நாட்டுக்காகவும் அரச கட்டளைக்கு கீழ்ப் படிந்தேன். சரி, முடிக்கிறேன் என பாஸிடம் சொன்னேன்.

சர்வதேச அளவில் தக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கொலையை வெறும் விபத்தாக சித்தரிப்பதும் அதை அம்மக்கள் நம்ப வைப்பதும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. நிறைய நிறைய திட்டமிட வேண்டும். ஒரு இடத்தில் சறுக்கினாலும் மொத்த சாயமும் வெளுத்து விடும். ஆகவே விஸ்தாரமாக சதித் திட்டத்தை உருவாக்கினோம்.மிகத் துல்லியமாக செயல்பட்டு அதை கச்சிதமாக முடித்தோம்.

கொலைக்கு அடுத்த பெரிய தலைவலி ஊடகங்களை எப்படி சமாளிப்பது என்பது. சாதாரண விபத்தையே கொலையாக சித்தரிப்பவர்கள் ஒரு மெகா மர்டரை ஆக்சிடென்ட் என்றால் ஒப்புக் கொள்வார்களா, புலனாய்வு செய்கிறேன் பேர்வழி என்று ஆளாளுக்கு புறப்பட்டு குட்டையை குழப்பினால் என்னாவது?

தீவிரமாக யோசித்து அதற்கும் திட்டம் வகுத்தோம்.

எல்லா ஊடக கம்பெனியும் பக்கிங்ஹாம் அரண்மனையில் யாராவது ஒருத்தரை சோர்ஸாக பிடித்து வைத்திருக்கிறது. இந்த சோர்ஸ் ஒவ்வொருத்தரும் சம்பந்தப்பட்ட கம்பெனியின் ஏதோ ஒரு ஊடகருடன்தான் தொடர்பில் இருப்பார்கள். எனவே அந்த சோர்ஸ்கள் மூலம் ஊடகர்களுக்கு துண்டு துண்டாக தகவல் பரப்பினோம். ஊடகர் உடனே எடிட்டரிடம் சொல்வார். இது அரண்மனை ரகசியம் ஆச்சே, பிரசுரிக்கலாமா வேண்டாமா என்று கேட்க முதலாளியிடம் போவார் எடிட்டர்.

ஊடக முதலாளிக்கு ஒரே ஒரு ஆசை நிச்சயம் இருக்கும். பக்கிங்ஹாம் அரண்மனையில் உட்கார்ந்திருக்கும் குற்றக் குடும்பத்தின் தயவில் எப்படியாவது ஒரு நைட்ஹுட் (ராஜ பட்டம்) வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை. ‘இந்த தகவல் மக்களை அடைய வேண்டும் என்று அரண்மனையே விரும்புகிறது என்றால் நமக்கென்ன வந்தது? பிரசுரிக்க வேண்டியதுதானே. எதற்கும் நமது எதிரி ஊடகத்துடன் கிராஸ் செக் செய்து கொண்டு வெளியிடுங்கள்’ என்று எடிட்டருக்கு ஓனர் அட்வைஸ் கொடுப்பார்.

அப்படி கிராஸ் செக் செய்ய ஒரு ஊடகர் முயன்றால், அவர் யாரை தொடர்பு கொள்கிறாரோ அந்த ஊடகரும் இதே தகவலை தனக்கு கிடைத்த தனிச்செய்தியாக (எக்ஸ்க்லூசிவ்) வைத்திருக்குமாறு எம் ஐ5 ஏற்கனவே ஏற்பாடு செய்திருக்கும். எனவே அதை முந்தி நாம் கொடுக்க வேண்டும் என்று அவசரமாக பிரசுரித்து விடுவார்கள். அல்லது ஒளிபரப்புவார்கள்.

நல்லவேளை. பிரிட்டனில் எந்த ஊடகமும் சுதந்திரமாக செயல்படவில்லை என்பதால் அந்த வேலையும் எங்களுக்கு நல்லபடி முடிந்தது.

இந்த உண்மைகளை எல்லாம் இப்போது வெளியிடுவதால் நான் கைது செய்யப்படலாம். அரசு ரகசியங்களை வெளியிட்டதாக என் மீது குற்றம் சாட்டப்படலாம். உலகத்தை விட்டு போக தயாராகி விட்டவன் ஜெயிலுக்கு போகவா பயப்பட போகிறேன்?

ஒருவேளை புலன் விசாரணை நடத்த அரசு முன் வந்தாலும், அது சீக்கிரம் முடியாது. இது சிக்கலான கேஸ். எம்ஐ5 ஒரு கில்லாடித்தனமான அமைப்பு. தன் நடவடிக்கைகள் எதற்கும் எந்த தடயமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளும். எதுவுமே எழுத்து பூர்வமாக கோப்புகளில் கிடையாது. கொலையில் என்னோரு சம்பந்தப்பட்ட சகாக்கள் எல்லாரும் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அல்லது கோமாவில் கிடப்பார்கள்.

எல்லாவற்றையும் தாண்டி துப்புகள் கிடைத்து ஆதாரங்கள் திரட்டி சதி நிரூபணம் ஆகிறது என்றே வைத்துக் கொள்வோம். சதியின் நாயகனான பிரின்ஸ் பிலிப் மேல் கை வைக்க முடியுமா? மகாராணியின் கணவரை சட்டத்தின் கரங்கள் தீண்ட முடியுமா?

(இந்த செய்தி கேரி லாராபீ என்பவரின் யூடியூப் சேனலில் நேற்று வெளியானது. இவர் ஆதாரம் இல்லை என்ற காரணத்தால் வெகுஜன ஊடகம் நிராகரிக்கும் செய்திகளை தன் சேனலில் தொடர்ந்து வெளியிடுபவர். பெரும்பலும் குற்ற நிகழ்வுகள் குறித்த செய்திகள். ஆதாரம் கிடைக்கவில்லை என்பதால் அங்கு குற்றமே நிகழவில்லை என்று பொருளல்ல என்பது இவரது நிலைப்பாடாக தோன்றுகிறது. டயானா குறித்த இந்த செய்தி ஐரோப்பா, அமெரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் உள்ள டயானா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.)

லிங்க்: https://www.youtube.com/watch?v=SysWo5CICeQ&t=7s

தமிழாக்கம் : கதிர்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Retired mi5 agent confesses on deathbed i killed princess diana

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X