ரஷ்ய அரசாங்கம், இங்கிலாந்தின் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் மற்றும் மேற்கித்திய நாடுகளை சேர்ந்த சிலர் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை கூறுவதாக குற்றச்சாட்டியுள்ளனர். இவை தான் அணு ஆயுத படையை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவிப்பு வெளியிட வழவகுத்ததாக சொல்லப்படுகிறது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, "உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, நேட்டோ - வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் ராணுவக் கூட்டணிக்கும், மாஸ்கோவுக்கும் இடையே சாத்தியமான மோதல்கள் குறித்த டிரஸ்ஸின் பேச்சு , அணு ஆயுத படை நடவடிக்கைக்கு காரணம்" என்றார்.
மேலும் பேசிய அவர், "நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே சாத்தியமான மோதல்கள் குறித்து பல்வேறு நிலைகளில் உள்ள பல பிரதிநிதிகளால் பேசப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகைய கருத்துகளை பேசியவர்கள், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சராக இருந்தாலும் நான் பெயர் சொல்லி கூறமாட்டேன்" என்றார்.
ஞாயிற்றுக்கிழமை, ரஷ்ய அதிபர் புதின், மேற்கத்திய நாடுகள் "சட்டவிரோத தடைகளை" விதிப்பதன் மூலம் நட்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், ரஷ்யா தொடர்பாக தேவைபற்ற அறிக்கைகளை வெளியிடுவதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாகவே, பாதுகாப்பு அமைச்சரிடமும், படை தளபதியிடமும் அணு ஆயுத படைகளை தயார் நிலையில் வைத்திட உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.
இங்கிலாந்து பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் கூறுகையில், "ரஷ்யாவின் இந்த அறிவிப்பானது, உக்ரைனில் என்ன தவறு நடக்கிறது என்பதிலிருந்து கவனத்தை சிதறடிப்பதற்காகவும், ரஷ்யா அணு ஆயுத படை வைத்திருந்ததை உலகிற்கு நினைவூட்டுவதாகவும் இருக்கிறது.
அணு ஆயுதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கும் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து சமமான அல்லது அதிக பதில் கிடைக்கும் என்பதை புதின் அறிவார்" என்றார்.
முன்னதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அடுத்த 24 மணிநேரம் நாட்டின் மீதான ரஷ்ய தாக்குதலில் "முக்கியமானது" என்று எச்சரித்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil