உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், இன்று 10 ஆவது நாளாக நீடிக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாம் பெரிய நகரமான கார்கிவ்வை கைபற்ற ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
போர் தொடங்கியதும் உக்ரைன் தனது வான்வழி தளத்தை மூடியதால், உக்ரைனில் சிக்கித்தவிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்குச் சிக்கியுள்ளவர்கள் ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகள் வழியாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
அதே சமயம், உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருவதால், இந்திய மாணவர்களால் எல்லையை கடக்கமுடியவில்லை. எனவே, இந்தியர்களை மீட்க ரஷ்ய ஒத்துழைப்பு தர வேண்டும் என இந்திய தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மக்கள் பாதுகாப்பாக வெளியேற ராணுவ நடவடிக்கை இல்லாத சிறப்பு வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், மனிதாபிமான அடிப்படிடையில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற உக்ரைன் மீதான போரைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதுவும், உக்ரைனில் உள்ள வோல்னோவாகா, மரியுபோல் ஆகிய இரு நகரங்களில் மட்டுமே போரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலை GMT நேரப்படி 6 மணி (இந்திய நேரப்படி காலை 11.30) முதல் நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது
இதுகுறித்து ரஷ்யா கூறுகையில், பொதுமக்கள் வெளியேற வழிவகை செய்யும் மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு எத்தனை நேரம் அமலில் இருக்கும் என்பதற்தான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil