முஸ்லீம்களின் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் புனித பயணமாக கருதப்படும் மெக்காவிற்கு சென்றவர்கள் சாலையோரத்தில் சரிந்து விழுந்து மரணமடைந்த புகைப்படங்கள், அரபு மொழி சமூக ஊடகங்கள் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து பல புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் இறந்தவர்கள் பலரும், முஸ்லீம்களின் பாரம்பரிய யாத்ரீகர்களின் வெள்ளை உடையை அணிந்திருந்த நிலையில், அவர்களின் முகங்கள் துணியால் மூடப்பட்டிருக்கும்.
சவுதி அரேபியாவில் நூற்றுக்கணக்கான ஹச் யாத்ரீகர்கள் இறந்துள்ளது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில். மிக அதிக வெப்பநிலை மற்றும் தங்குமிடம் அல்லது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இவர்கள் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில் கடந்த வார இறுதியில் தொடங்கிய வருடாந்திர நிகழ்வின் போது அங்கு வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸ் (125 டிகிரி பாரன்ஹீட்) ஆக உயர்ந்தது.
உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1.8 மில்லியன் முஸ்லிம்கள் சவூதி அரேபியாவில் ஹஜ் பயணம் செய்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டனர். உலகின் மிகப்பெரிய மதக் கூட்டங்களில் ஒன்றான ஹஜ் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றக உள்ளது. ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
இது குறித்து சவுதி அரேபிய சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், வெப்பச் சோர்வு அடிப்படையில், 2,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இறப்பு பற்றிய தகவல்கள் வெளிவருவதற்கு முன்பே இது குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகிவிட்ட நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளியாகவில்லை
ஏ.எஃர்.பி (AFP) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த சில நாட்களாக பல்வேறு ஆதாரங்கள் மற்றும் நாடுகள் வழியாக இறப்பு எண்ணிக்கையை கணக்கிடுகிறது. அதன்படி இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை, 1000-ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் எகிப்து, இந்தோனேசியா, செனகல், ஜோர்டான், ஈரான், ஈராக், இந்தியா மற்றும் துனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்கள் பலரும் இறந்துவிட்டதாக அந்நாடுகளின் அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக எகிப்து நாட்டில் இருந்து வந்த 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், இந்தோனேசியாவில் இருந்து வந்த 140-க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால், கடந்த ஆண்டுகளில், சவூதி அதிகாரிகள் ஹச் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வெப்பநிலையின் தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்துள்ளனர். ஆனாலும், சமீபத்திய இறப்புகளில் பெரும்பாலானவை அதிக வெப்பநிலை காரணமாக நிகழ்ந்துள்ளதாக கருதப்படுகிறது. ஹஜ்ஜை மேற்கொள்வது முஸ்லீம்கள் இறப்பதற்கு முன் செய்ய விரும்பும் ஒன்று என்பதால், ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களில் பலர் வயதானவர்களாக இருந்தனர்.
இந்த யாத்திரையின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையல், ஹச் பயணம் மேற்கொண்டவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இன்னும் சவூதி மருத்துவமனைகளைத் தேடி அலைந்துகொண்டிருக்கின்றனர். ஒருசிலர் மக்காவிற்கு வந்து காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க சமூக ஊடகங்களில் உதவிகள் கோரி வருகின்றனர். இந்த சம்பவத்தில் யாரை குற்றம் சொல்வது என்று யாத்ரீகர்களின் சொந்த நாடுகளில், பெரும் விவாதமே எழுந்துள்ளது.
ஹஜ் பயணம் செய்ய, யாத்ரீகர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். இட வசதி இருப்பதை விட அதிகமான முஸ்லிம்கள் வர விரும்புவதால், சவுதி அரேபியா ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீட்டு முறையை நடத்துகிறது. அதேபோல் கடந்த காலங்களில், கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் ஆகியவை கடுமையான பிரச்சனைகளாக இருந்தன. மேலும் சில பாதிக்கப்பட்ட குடும்பங்கள் போதுமான அளவு வதிகள், கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்க தங்குமிடம் ஏற்பாடு செய்ய தவறிவிட்டன என்று சவுதி அரேபிய அதிகாரிகள் மற்றும் தங்கள் நாட்டின் அதிகரிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். மற்றவர்கள் பதிவு செய்யாமல் மெக்காவிற்கு வந்தவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
சவூதி அரேபியாவுக்கான பயணம் பொதுவாக பயண முகவர் நிறுவனங்களால் எளிமையாக ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் முஸ்லீம் சமூக அமைப்புகளுடன் அல்லது மசூதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணிகளுக்கு மக்காவில் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடு செய்கிறார்கள். பதிவு செய்யப்பட்ட யாத்ரீகர்கள் அந்த பயண முகவர்களால் நடத்தப்படும் மெக்காவில் ஒரு பணி அல்லது முகாமின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
அதே சமயம் தற்போது 171,000 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்யாமல் ஹச் யாத்திரை மேற்கொண்டதாகவும், ஹஜ் தொடங்குவதற்கு முன்னரே அவர்கள் தங்கள் நாட்டில் இருப்பதாக இருப்பது தெரியவந்ததாக சவுதி பொது பாதுகாப்பு இயக்குனர் முகமது பின் அப்துல்லா அல்-பாஸ்மி கூறியிருந்தார். சட்டவிரோதமாக ஹஜ் செய்யும் எவரையும் கைது செய்ய வேண்டும் என்று சவுதி அரேபிய பாதுகாப்பு சேவைகள் முன்பு பிரச்சாரம் செய்திருந்தது.
பதிவு செய்யப்பட்ட யாத்ரீகளுக்கு, ஏர் கண்டிஷனிங், தண்ணீர், நிழல், மற்றும் பனிமூட்டம் அல்லது குளிரூட்டும் மையங்கள் ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும் நிலையில், பதிவு செய்யப்படாத யாத்ரீகர்கள் அதே வகையான வசதிகளை அணுக முடியாது. இதுவே உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தின்போது யாத்ரீகர்களை குளிர்விக்கும் சவுதி முயற்சிகள் வெற்றி பெற்றதா என்று கேட்கப்பட்ட ஒரு ஆய்வில், உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் உதவினாலும், பருவநிலை மாற்றம் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பகுதியை வெப்பமாக வைத்திருக்கிறது. இதனால் மிகவும் ஆபத்தானதாகவும் மாற்றப் போகிறது என்பதில் இருந்து தப்ப முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“