சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்கி உத்தரவிட்டிருக்கின்றார் சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர். 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்று விதிக்கப்பட்ட தடையினை நீக்கியதால் சவுதி அரேபிய பெண்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார்கள். இனிமேல் வாகனத்தில் பயணிக்கும் போது அவர்களுக்கான ஆண் துணையை உடன் அழைத்துச் செல்லவேண்டிய அவசியமும் இல்லை என்றும் அவ்வுத்தரவில் தகவல்.
சவுதியில் பெண்கள் ஏன் வாகனம் ஓட்டக்கூடாது?
சவுதி அரேபியாவில் வஹாபிசம் என்ற கொள்கைகளை அதிகம் பின்பற்றும் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாகும். தந்தை வழிச் சமூகத்தைச் சார்ந்த சவுதியில் ஒரு பெண் எங்கு சென்றாலும் அவர்களுக்கான ஆண் துணையுடன் தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயமும் இருக்கின்றது. ஒரு பெண் வாகனம் ஓட்டவும், ஏன் அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் போதும் கூட அப்பாவையோ, மகனையோ, கணவனையோ உடன் அழைத்துச் செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது.
தடை ஏன் நீக்கப்பட்டது?
சமூக மாற்றத்திற்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக சவுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மிகவும் முக்கியமான ஒன்று தான் பெண்களுக்கான வாகனம் ஓட்டும் உரிமை. அதனை நடைமுறைப்படுத்த சவுதியின் தலைநகர் ரியாத்தில் 40 பெண்கள் தங்களுடைய வாகனங்களை ஓட்டி தங்களின் விருப்பத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மான், சவுதியின் சமூக மாற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதன் காரணமாக சவுதி விசன் 2030 என்ற கொள்கைகளை உருவாக்கி, அதில் சமூகம், மனித வளம், பெண்களின் வளர்ச்சி ஆகியவற்றில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று விரும்புகின்றார். மேலும் சவுதியின் பொருளாதார மாற்றங்களை கணக்கில் கொண்டும் சவுதி விசன் 2030 திட்டம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் “பெண்கள் அனைவரும் இந்நாட்டின் மதிப்பிட முடியாத சொத்து, அவர்களின் நலன்கள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும், 2030ஆம் ஆண்டு வாக்கில் வேலை செய்யும் இடங்களில் 30% இடம் பெறுவார்கள்” என்றும் கூறப்பட்டிருக்கின்றது.
ஓட்டுநர் உரிமத்துடன் நிற்கும் சவுதி அரேபிய பெண்
தடை நீக்கப்பட்ட பின்பு என்ன நடக்கும்?
இதுவரை முறையாக வாகனம் ஓட்டும் பயிற்சியினைப் பெற்றவர்களுக்கு முறையாக உரிமம் வழங்கப்படும். ஜூன் 5ம் தேதி 10 பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது. நாட்டில் இருக்கும் பயிற்சி மையங்களில் இப்பயிற்சியினை பெறுவதற்கான அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 2000 பேர்கள் மிக விரைவில் ஓட்டுநர் உரிமம் பெற இருப்பதாகவும் தகவல் வெளியிட்டிருக்கின்றது சவுதியின் தகவல் துறை அமைச்சகம்.
இதைப்பற்றிய சர்வதேச நாடுகளின் கருத்து
அமெரிக்காவின் செக்ரட்டரி ஆண்டனியோ குட்டேரஸ் இதைப்பற்றி “சவுதி அரேபியா எடுக்கும் மிக முக்கியமான நடவடிக்கையாகும் இதை நாங்கள் வரவேற்கின்றோம்” என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
சர்வதேச அம்னெஸ்டி அமைப்பும் இதை வரவேற்றிருக்கின்றது. இது போன்ற சமூக மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டிருக்கின்றது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான அம்னாஸ்டி தலைவராக இருக்கும் சமாஹ் ஹாதித் “இம்மாற்றங்களை விரும்பி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துப் பெண்களிற்கும் கிடைத்த வெற்றியாக இதைப் பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்”.
மத்திய கிழக்கு அரபு நாடுகளுக்கான மனித உரிமை ஆணையராக இருக்கும் சாரா லேஹ் விட்சன் குறிப்பிடும் போது, “சமீபத்தில் ஓட்டுநர் உரிமை வேண்டும் என்று போராடிய பெண்களில் பலர் இன்னும் சிறைகளில் இருக்கின்றார்கள் என்பதால் இந்நிகழ்வினை எங்களால் கொண்டாட இயலவில்லை” என்ற வருத்தத்தினை பதிவு செய்திருக்கின்றார்.