40 ஆண்டுகளுக்கு பின்பு, சவுதி அரேபியாவில் அங்குள்ள மக்களுக்காக சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவிற்கு சென்று வருபவர்களிடம் கேளுங்கள், இந்த நாடு முன்பு இருந்தது போல் இப்போது இருக்கிறதா? என்று... காரணம், சவுதியின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான், பதவியேற்ற பிறகு நாட்டில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
குறிப்பாக, பெண்களுக்கு முன்பு இருந்த கட்டுப்பாடுகள் பெருமளவில் தகர்க்கப்பட்டுள்ளன. பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி, சவுதி அரேபியாவின் குறிப்பிட்ட ஸ்டேடியங்களில் பெண்கள் விளையாட்டு போட்டிகளை நேரில் காண அனுமதி என பல்வேறு அதிரடி மாற்றங்களை சவுதி அரசு அறிவித்து வருகிறது.
அந்த வகையில், தற்போது அந்த நாட்டு மக்களுக்காக சவுதி அரசு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சினிமா மீதான தடை விலக்கப்படுவதால் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி காணும் விதத்தில், 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது. இந்நிலையில், சுமார் 40 ஆண்டுகளை கடந்து தற்போது சினிமா மீதான தடையை நீக்கி வரும் 18 ஆம் தேதி முதல் சவுதியில் தியேட்டர்கள் செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 தியேட்டர்கள் வரை திறக்கப்படுகின்றன.வுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் சினிமா தியேட்டர்கள் மீண்டும் புதுப்பிக்கப்படவுள்ளன. அதே போல், 40 ஆண்டுகளுக்கு பின்பு, அங்குள்ள பொதுமக்கள் தியேட்டரில் சென்று சினிமாவைக் காண ஆவலாக காத்திருக்கின்றனர்.