சீனாவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சீனா செல்கிறார். அங்கு, இரு நாடுகளுக்கும் இடையே இரு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இது இன்றும் நடைபெறுகிறது. 2001ம் ஆண்டு எட்டு நாடுகளைக் கொண்டு எஸ்.சி.ஓ.என்ற அமைப்பு உருவானது. இந்தியா, கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளன.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடந்த ஆண்டுதான் உறுப்பினர் அந்தஸ்து கிடைத்தது.
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில், இந்தியா உறுப்பு நாடாக ஆன பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறும்போது, “இந்த சந்திப்பு நல்ல முறையில், முன்னோக்கிய பார்வையுடன் அமைந்தது” என்று குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கான சீன தூதர் லுவோ ஜோஹூய், “வூகன் முறைசாரா உச்சி மாநாட்டில் இரு தரப்பிலும் எட்டப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும், எதிர்கால இந்திய, சீன உறவு குறித்து திட்டமிடுவதிலும் இரு தலைவர்களும் கவனம் செலுத்தினர்” என குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் முன்னிலையில் பிரம்மபுத்திரா நதிநீரை இந்தியாவுக்கு சீனா வழங்குதல் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சீனாவுக்கு இந்தியாவில் இருந்து பாசுமதி தவிர்த்த பிற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கான நெறிமுறைகளை திருத்தம் செய்வதற்கான ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்த சந்திப்பிற்கு பிறகு பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை நடத்துகிற சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினேன். இருதரப்பு மற்றும் உலக விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம். இந்திய-சீன உறவுக்கு எங்களது பேச்சு மேலும் வீரியம் சேர்க்கும்” என குறிப்பிட்டு உள்ளார்.