இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே : ரணில் விக்ரமசிங்கேவின் ஆட்சி கலைக்கப்பட்டு, புதிய பிரதமராக இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவினை அறிவித்தார் அமைச்சர் மைத்ரிய சிறிசேனா. இதற்கு பலதரப்பட்ட எதிர்ப்புகள் நிலவி வந்தது. சனிக்கிழமை (27/10/2018) அன்று கூடிய இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பாராளுமன்றம் பகல் 12 மணியோடு நிறைவடைவதாக அறிவித்தார் அதிபர்.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவின் அமைச்சரவையில் இருந்த பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாப்புக் காவலர், ராஜபக்சேவின் ஆதரவாளர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் இருக்கும் தன்னுடைய அலுவலகத்திற்கு அர்ஜூனா ரணதுங்கா செல்ல முயன்ற போது, அங்கிருந்தவர்கள் அவரை உள்ளே விடவில்லை. இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை முற்றிய போது, அர்ஜூனாவின் பாதுகாப்புக் காவலர் ராஜபக்சேவின் ஆதாரவாளர்களை சுட்டிருக்கிறார். அர்ஜூனாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. பாதுகாப்புக் காவலர் கைது செய்யப்பட்டிருக்கிறார். எதற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே : கேள்வி எழுப்பும் சபாநாயகர்
இந்நிலையில் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்றும் ராஜபக்சே பதவி ஏற்பை ஏற்றுக் கொள்ள முடியாது இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும் ராஜபக்சே உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். அவருக்கு எத்தனை எம்பிக்கள் பலம் உள்ளது என்று நிரூபிக்க வேண்டும். ராஜபக்சே தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே அவரது பதவி ஏற்பை ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
மைத்ரிபால சிறிசேனாவிற்கும் ரணிலுக்கும் என்ன பிரச்சனை ?
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் மைத்ரிபால சிறிசேனா
சிறிசேனாவிற்கும் விக்ரமசிங்கேவிற்கும் இடையில் அதிகாரப் பகிர்வு குறித்த பிரச்சனை வெகு நாட்களாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சிறிசேனா மற்றும் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தாபய ராஜபக்சேவினை கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்று வந்தது என்ற புகார்கள் குறித்து விக்ரமசிங்கே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ரணில் மீது சிறிசேனா குற்றம் சுமத்தினார்.
மேலும் விடுதலைப் புலிகளை அழிக்க ராஜபக்சே தலைமையில் எடுத்துக் கொண்ட கோரமான முடிவின் விளைவாக மேற்கு உலக நாடுகள் இலங்கையில் பொருளாதாரத் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.