சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வெடி வெடித்த காரணத்திற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள் கைது:
கைது செய்யப்பட்ட 2 இந்தியர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சிங்கப்பூர் சட்ட விதிகளின்படி அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ.5.25 லட்சம் வரையில் அபராதம் விதிக்க வாய்ப்பு இருக்கிறது.
தியாகு செல்வராஜு(29) மற்றும் சிவகுமார் சுப்பிரமணியன்(48) ஆகிய இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகின்றன.
சிங்கப்பூர் விதிகளின்படி, அதிகாரிகளிடம் முன்அனுமதியின்றி வெடி வெடிப்பது சட்டவிரோதமாகும். இந்நிலையில், இவர்கள் இருவரும் இந்தியர்கள் அதிகம் கூடும் இடமான லிட்டில் இந்தியா பகுதியில், சாலையின் குறுக்குச்சுவர் மீது அனுமதியின்றி வெடி வெடித்துள்ளனர்.
இதனால் இருவரையும் சிங்கப்பூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரும், வரும் 14ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதுக் குறித்த செய்தியை சிங்கப்பூர் ஊடகமான தி ஸ்டிரெய்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஆனால், இவர்கள் இருவரும் தமிழர்களா என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை தெரியவில்லை.
முதலில் சிவகுமார் வெடிப்பெட்டியை பிரித்து வைப்பதும், பின்னர் தியாகு அதை பற்ற வைப்பதுமான சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்திருக்கின்றனர். முன்னதாக, இந்த வீடியோ காட்சியை, சிங்கப்பூர் சாலை கண்காணிப்பு குழு ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.