சிங்கப்பூரில் கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் தங்கராஜூ சுப்பையாவுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் அதை அரசு இன்று (புதன்கிழமை) நிறைவேற்றியுள்ளது.
சிங்கப்பூரில் உலகின் மிகக் கடுமையான போதைப் பொருள் எதிர்ப்பு சட்டங்கள் உள்ளன. அந்நாட்டில் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கராஜூ சுப்பையாவுக்கு உறவினர்கள் மற்றும் உலகின் பல்வேறு மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கருணை மனுக்களையும் மீறி சிங்கப்பூர் அரசு அவருக்கு தூக்கு தண்டனையை இன்று (புதன்கிழமை) நிறைவேற்றியுள்ளது.
46 வயதான தங்கராஜூ சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு 1 கிலோவுக்கும் அதிகமான (2.2 பவுண்டுகள்) கஞ்சாவை மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற போது அந்நாட்டு அரசால் பிடிப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 2018-ம் ஆண்டு சுப்பையா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டது. இதையடுத்து சட்டப் போரட்டம் நடைபெற்றது. மேல் முறையீடு செய்யப்பட்டன.
தங்கராஜூ சுப்பையா குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கப்பூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் கோகிலா அண்ணாமலை கூறுகையில், சுப்பையாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பபட்டது. ஆனால் கோரிக்கைகளை குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து, சுப்பையா தூக்கிலிடப்பட்டார். மேலும் கருணை மனு கோரிக்கைக்கு சிங்கப்பூர் அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவில்லை என்று அவர் கூறினார்.
மரண தண்டனைக்கு எதிராக போராடும் பிரிட்டிஷ் நாட்டு கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன், சுப்பையாவுக்கு எதிரான தீர்ப்பு குற்றவியல் தண்டனைக்கான தரத்தை பூர்த்தி செய்யவில்லை, ஏனெனில் அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் போதைப்பொருள் இல்லை என்று கூறி மனுத் தாக்கல் செய்தார்.
இதற்கு பதிலளித்த சிங்கப்பூர் அரசாங்கம், பிரான்சன் பொய்களை பரப்புவதாகவும், நீதி அமைப்பை அவமதிப்பதாகவும் கூறியது. நீதிமன்றங்கள் வழக்கை ஆராய 3 ஆண்டுகளுக்கும் மேலாக செலவிட்டதாகவும், பிரான்சனின் கூற்று ” உண்மையற்றது” என்றும் கூறியது.
மேலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு, தங்கராஜூ சுப்பையாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் முறையை அரசு தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கெ கொண்டது.
இந்நிலையில் சட்டப் போராட்டங்களில் தங்கராஜூ சுப்பையாவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காத நிலையில் அவருக்கு சிங்கப்பூர் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மட்டும் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மரண தண்டனை என்பது போதைப்பொருளுக்கு எதிரான சிறந்த தண்டனை என்றும் இதனை அங்குள்ள பெரும்பாலான மக்கள் ஆதரிப்பதாகவும் கூறுகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“