ஆர்.சந்திரன்
21 வயதுக்கு மேற்பட்ட, தனது குடிமகன் அனைவருக்கும் சிங்கப்பூர் போனஸ் என்ற பெயரில் ரொக்கப் பரிசு தர சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் நிதிநிலை வலுவாக உள்ளதாலும், அதன் 2017ம் ஆண்டு பட்ஜெட்டின்படி, உபரி பணம் ஏராளமாக குவிந்திருப்பதாலும் இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் ஹெங் சீ கீட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, இதை எஸ்ஜி போனஸ் என குறிப்பிடப் போவதாகவும், இதன் மதிப்பு 700 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் எனவும் தெரிய வருகிறது. இதிலிருந்து 2 கோடியே 70 லட்சம் பேர் ரொக்கப் பரிசு பெறுவார்கள். இந்த தொகை 2018ம் ஆண்டு இறுதிக்குள் சம்மந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கை வந்தடையும் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த பரிசுத் தொகை, ஒருவரது பொருளாதார நிலையைப் பொறுத்து 3 அடுக்குகளாக வழங்கப்படுவதாகவும் தெரிகிறது.
1 லட்சம் சிங்கப்பூர் டாலருக்கு மேல் வருவாய் பெறும் ஒரு நபர் 100 சிங்கப்பூர் டாலரும், 28,000 சிங்கப்பூர் டாலர் வரை வருவாய் பெறும் நபர் 300 சிங்கப்பூர் டாலரும், இந்த இரண்டு வருவாய்க்கும் இடைப்பட்டவர்கள், அதாவது 28,001 முதல் 1 லட்சம் சிங்கப்பூர் டாலர் வரை சம்பளம் பெறும் நபர் 200 சிங்கப்பூர் டாலரும் போனஸாகப் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, புதிய ரயில்வே திட்டத்துக்கும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, அதன் பிறகுதான் நாட்டின் பட்ஜெட்டில் இந்த உபரி என்பதும் கவனிக்கத்தக்கது,
பொதுவாக, நிறுவனங்களில்தான், அதன் லாபம் அதிகரிக்கும்போது, அதை தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் என்ற வகையில் பிரித்து வழங்குவர். சிங்கப்பூர் என்ற ஒரு நாட்டையை, சிறந்த நிறுவனம் போல, முறைப்படி நிர்வகிப்பதால், அங்கு அரசு கஜானாவில் உபரி என்பது சாத்தியமாகிறது. மற்ற நாடுகளில்? குறிப்பாக, இந்தியாவில் எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடி, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்டு, இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் சேர்ப்பேன் என்று சொன்னார். அவர் சொன்னதை சிங்கப்பூர் அரசு செய்து காட்டிவிட்டது.