நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா மற்றும் மருமகன் விசாகனின் பாஸ்போர்ட்கள் அடங்கிய சூட்கேஸ், லண்டன் விமானநிலையத்தில் மாயமான சம்பவத்தால், லண்டன் விமானநிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பானது.
நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா, முதல் கணவர் அஸ்வினை விவகாரத்து செய்திருந்த நிலையில், சமீபத்தில் விசாகன் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செளந்தர்யா மற்றும் விசாகன், இரண்டு தினங்களுக்கு முன், எமிரேட்ஸ் விமானம் மூலம், சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றனர். லண்டன் விமானநிலையத்தில் இறங்கிய அவர்கள் குடியுரிமை அதிகாரிகளிடம் காட்டுவதற்காக பாஸ்போர்ட்களை எடுக்க முயல்கையில், அவர்களது பாஸ்போர்ட்கள் இருந்த சூட்கேஸ் மாயமானது தெரியவந்தது. அந்த சூட்கேஸில் பாஸ்போர்ட்கள் மட்டுமல்லாது அமெரிக்க டாலர்கள் பணமும், மற்ற பொருட்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. உடனடியாக, இவர்கள் லண்டன் விமானநிலைய காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
பாஸ்போர்ட் இல்லாமல் வெளியேறமுடியாது என்ற நிலையில், அவர்கள் விமானநிலைய ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த தகவல், உடனடியாக இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தூதரக அதிகாரிகளின் துரித முயற்சியால், அவர்களுக்கு உடனடியாக டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் விமானநிலையத்திலிருந்து வெளியேறினர்.
செளந்தர்யா - விசாகன் பாஸ்போர்ட், சூட்கேஸ் மாயம், அதனைத்தொடர்ந்து புகார், விசாரணை உள்ளிட்ட நிகழ்வுகளால், லண்டன் விமானநிலையததில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.