மாலத்தீவில் நான்காவது தெற்காசிய சபாநாயகர்கள் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில், நேற்று (செப்.1) பாகிஸ்தான் தேசிய சட்டசபை துணை சபாநாயகர் காசிம் சுரி, ராஜ்ய சபா துணை சேர்மேன் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் பாகிஸ்தான் செனட்டர் குராடுலைன் மர்ரி ஆகியோருக்கு இடையே காஷ்மீர் சிறப்பு பிரச்சனை குறித்து கடும் விவாதம் நடைபெற்றது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து பாகிஸ்தான் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஹர்வியன்ஷ் சிங், “இந்தியாவின் உள் பிரச்சினையை இங்கு எழுப்புவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், மேலும் இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளுக்கு புறம்பான பிரச்சினைகளை எழுப்புவதன் மூலம் இந்த மன்றத்தை அரசியல் மயமாக்குவதையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த சுரி பேசுகையில், "சித்ரவதை செய்யப்பட்ட காஷ்மீரிகளின் நிலைமையை நாங்கள் புறக்கணிக்க முடியாது. அவர்கள் பயங்கரவாதத்தையும் அநீதியையும் கையாண்டு வருகின்றனர். ” என்று இந்தியா மீது குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்ற தூதுக்குழு எழுப்பிய அனைத்து கூற்றுகளையும் தெற்காசிய சபாநாயகர்கள் உச்சி மாநாடு நிராகரித்திருக்கிறது.
இதுகுறித்து மக்களவை செயலாளர் கூறுகையில், "காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் முன்வைத்த அனைத்து வாதங்களையும் தெற்காசிய சபாநாயகர்கள் உச்சி மாநாடு நிராகரித்து விட்டது" என்றார்.