அதிகார கட்டமைப்பை மாற்றும் அரசியலமைப்பு திருத்த மசோதா: இலங்கையில் நடப்பது என்ன?

ஜனநாயகத்திற்கு அத்தியாவசியமானதாக கருதப்படும் பொறுப்புத்தன்மை, வெளிப்படைத்தன்மை, ஆகியவை குழிதோண்டி புதைக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

By: Updated: October 22, 2020, 01:50:09 AM

கடந்த ஆட்சி காலத்தில், அதிபரிடமிருந்து பறிக்கப்பட்ட பல நிர்வாக அதிகாரங்களை மீட்டெடுக்கும் 20A எனப்படும் உத்தேச அரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் தொடங்கியது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் கைகளில் அதிகாரத்தை மையப்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்றும், அதிகாரத்துவ கட்டமைப்பை இலங்கை அதிபர்  தவறாக பயன்படுத்த வழிவகுக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

செப்டம்பர் மாத இறுதியில், முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு இலங்கை நீதிமன்றம் ஆதராவாக தீர்ப்பளித்தது. மசோதாவின், நான்கு உட்பிரிவுகளுக்கு பொது வாக்கெடுப்பு தேவை என்றும், மீதமுள்ளவை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படலாம் என்றும் கூறியது.

இலங்கை சமூகத்தில் செல்வாக்கு மிக்க அரசியல் எதிர்க்கட்சிகள், பௌத்த மதகுருமார்கள், கத்தோலிக்க திருச்சபை, இலங்கையின் தேசிய கிறிஸ்தவ கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளும், ராஜபக்ஷவின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் மசோதாவை திரும்பப் பெறுமாறு ஆளும்கட்சிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கோத்தபய ராஜபக்சேவின், சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ இருவரும்  முந்தைய ஆட்சியில் 19ஆவது  அரசியலமைப்பு  திருத்தத்தை கடுமையாக விமர்சித்தனர். இந்த திருத்தம், நாட்டின் முக்கிய பதிவிகளுக்கு நியமிக்கும் பொறுப்பை,  சுயாதீன அமைப்புகளுக்கு வழங்கியது.

நீதித்துறை, பொது நிர்வாகம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த அரசியலமைப்பு  திருத்தம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு வழிவகுத்தது. அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து  தகவல்களை உரிமையுடன் மக்கள் எளிதில் அறிந்து கொள்வதற்கு வழிவகுத்தது.

தற்போதைய இலங்கை அரசு, 19ஆவது  அரசியலமைப்பு  திருத்தத்தை ரத்து செய்ய முயல்கிறது. இருப்பினும் தகவல் அறியும் உரிமையை தக்க வைத்துக் கொள்ள விரும்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்தில், இலங்கை நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களிடம் பேசிய அதிபர் ராஜபக்ஷ, அரசியலமைப்பின் ‘குழப்பமான’ பகுதிகள் மாற்றியமைக்கப்படும் என்று  உறுதியளித்தார்.

அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதுதான்  பாராளுமன்றத்தின் ‘முதல் பணியாக’ இருக்கும் என்று கூறிய அதிபர் ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் கட்சி இதற்கான முயற்சிகளை விரைந்து செயல்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

“1978 ல் நிறுவப்பட்டதில் இருந்து, நமது அரசியலமைப்பு 19 முறை திருத்தப்பட்டது. இப்போது, அது பல தெளிவற்ற, நிச்சயமற்ற தன்மைகளை கொண்டுள்ளது. முடிவில்,  குழப்பத்தை விளைவிக்கிறது” என்றும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற இலங்கை பாராளுமன்றத் தேர்தலில், மகிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் கட்சி, மொத்தமுள்ள 225 இடங்களில் 145 இடங்களில் வெற்றிபெற்றது. சிறிய கட்சிகளின் ஆதரவு இருப்பதால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

என்ன மாற்றம் வரும்?  

முன்மொழியப்பட்ட 20 ஏ அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இரட்டை குடியுரிமை வைத்துள்ள மக்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு  கிடைக்கும். ஒரு வருட காலத்திற்குப் பிறகு  நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு வழங்கப்படும். மேலும், நீதித்துறை உள்ளிட்ட பிற உயர் அதிகாரிகளை நியமிப்பதில் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரத்தை வழங்கும்.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகத்தை கணக்குச் சரிபார்க்கும் பணியை செய்யமாட்டார்.

ஆனால், இது பலவீனமான அமைச்சகங்களுக்கு (பிரதமர் + அமைச்சர்கள்) வழிவகுக்கும்  என்று அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு அத்தியாவசியமானதாக கருதப்படும் பொறுப்புத்தன்மை, வெளிப்படைத்தன்மை, ஆகியவை குழிதோண்டி புதைக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

இரட்டைக் குடியுரிமை பெற்ற மக்களை  பாராளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிப்பதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதாகவும், அவரை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sri lanka 20a constitutional amendment expanded powers for president rajapaksa

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X