இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் ஜூலை 28 ஆம் தேதி வரை அனுமதியின்றி இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளது என ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. இரண்டு முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்கள் உட்பட மேலும் மூன்று முன்னாள் அதிகாரிகளும் ஜூலை 28 ஆம் தேதி வரை நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற முடியாது என்று ஊழல் எதிர்ப்பு குழு ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட சில மணி நேரங்களிலேயே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். சனிக்கிழமையன்று இலங்கை பாராளுமன்றம் கூடும் என்றும் அரசியலமைப்பின் படி 7 நாட்களுக்குள் புதிய அதிபரைத் தெரிவு செய்யப்படுவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை கூறியதாக டெய்லி மிரர் லங்கா செய்தி வெளியிட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் புதிய பிரதமரை நியமிப்பார். பின்னர், அவர் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
கடந்த வாரத்தில் இலங்கை அதிபரின் இல்லம் மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசாங்க கட்டிடங்களை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க விரும்பவில்லை எனக் கூறி வியாழக்கிழமை அந்த இடங்களில் இருது காலி செய்தனர். இதைத் தொடர்ந்து, இலங்கை ராணுவ வீரர்கள் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
இந்த நிலையில்தான், இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் ஜூலை 28 ஆம் திகதி வரை அனுமதியின்றி இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், ராஜபக்சே சகோதரர்களுக்கு இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”