இலங்கையில் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அந்நாட்டின் ராணுவத் தளபதியாக திங்கள் கிழமை நியமிக்கப்பட்டார். இதற்கு சர்வதேச அளவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம், இது நாட்டின் இறையாண்மை முடிவு என்று கூறி விமர்சனங்களை நிராகரித்துள்ளது.
ஷவேந்திர சில்வா 1984 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் கேடட் அதிகாரியாக சேர்ந்தார். ராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ராணுவ பணிக்குழுவின் தலைவராக இருந்தார். இவர் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை ராணுவத்தில் 58வது படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டார். அப்போது போர்க்குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களில் ஷவேந்திர சில்வாவும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பாக அவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஷவேந்திர சில்வா அவர் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவந்தார். இந்நிலையில் அவர் இலங்கையின் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு, “இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளது” என்று ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை மேற்கோள்காட்டியுள்ளது.
அதே போல, இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது தமிழர்களை அவமதிக்கும் செயல் என இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஷவேந்திர சில்வா இலங்கையின் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பும் விமர்சனம் எழுந்த நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை “ஷவேந்திர சில்வாவை ராணுவத் தளபதியாக நியமித்திருப்பது இறையாண்மை முடிவு” என்று கூறி விமர்சனங்களை நிராகரித்துள்ளது.