Sri Lanka Economic Crisis: கடந்த சில நாள்களாக, இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு, பணவீக்கம், சுற்றுலா துறை முடக்கம் ஆகியவை இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. எரிபொருள் இறக்குமதி செய்யமுடியாததால், அந்நாட்டு மக்கள் 13 மணி நேர மின்வெட்டை சந்திக்கின்றனர். அத்தியாவசிய பொருள்களின் வருகை பற்றாக்குறையால், அதன் விலையும் விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது. இது, மக்களை சாலைக்கு வந்து போராட துண்டியது.
இலங்கையின் மோசமான நிலைமைக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்தது. நிலைமையை கட்டுப்படுத்த, கடந்த 1-ந்தேதி முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுஉள்ளது.
மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததால், ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதில், அதிபரின் சகோதரனும், நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சே மட்டுமே ராஜினாமா கடிதம் அளிக்கவில்லை. ஆனால், அவர் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, நீதித்துறை அமைச்சராக இருந்த அலி சப்ரி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தவிர வெளியுறவு அமைச்சராக ஜி.எல்.பெரீஸ், கல்வித்துறை அமைச்சராக தினேஷ் குணவர்தனே, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜான்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் புதிதாக பெற்றுக்கொண்டனர்.
இலங்கை மத்திய வங்கி கவர்னர் அஜித் நிவார்ட் கப்ராலும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக சிபிஎஸ்எல் முன்னாள் அதிகாரி பி.நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்துக்கட்சி அழைப்பு நிராகரிப்பு
அமைச்சர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்ததால், நாட்டில் அனைத்துக்கட்சிகள் இடம்பெறும் தேசிய அரசு அமைக்க முடிவு செய்த கோத்தபய ராஜபக்சே, புதிய அரசில் இணையுமாறு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்டுள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால், அதிபரின் இந்த அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்து உள்ளன. அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யாதவரை எந்த அரசிலும் இணையப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பிரதமர் வீடு முற்றுகை
திங்கட்கிழமை தங்காலையில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் இல்லத்தை முற்றுகையிட்ட 2 ஆயிரம் பேர், அவரை பதவி விலக வலியுறுத்தினர். ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு அங்கிருந்த தடுப்புகளையும் தகர்த்து ஏறிந்தனர்.
இதையடுத்து, பாதுகாப்புக்கு நின்ற காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்
சுவாரஸ்யமாக, சிங்களவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தங்காலை, ராஜபக்ச குடும்பத்தின் கோட்டையாக கருதப்பட்டு வந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.