இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அதன் விளைவாக அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்படுவதாக அதிபா் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவு, நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த நிலையில், அதன் பாதுகாப்புப் படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபரும், அரசாங்கமும் பதவி விலகக் கோரி பல வாரங்களாக பொதுமக்கள் நடத்திய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்த தகவலின்படி, ராஜபக்சேவின் முடிவு, பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், நாட்டில் சுமூகமான செயல்பாடு நிலவ, அத்தியாவசிய சேவைகள் எந்தவித பாதிப்புமின்றி மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் இந்த அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிபர் கோத்தபய ராஜபக்சவையும், அவரது அரசாங்கத்தையும் பதவி நீக்கம் செய்யாத சட்டமியற்றுபவர்களை கண்டித்து பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, இலங்கை போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் தண்ணீர் பாய்ச்சி கலைத்தனர்.
வியாழன் அன்று அரசு ஆதரவு பெற்ற துணை சபாநாயகர்’ பாராளுமன்றத்தில் நல்ல வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் தலைமையில் போராட்டம் தொடங்கியது.
அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை, மற்றும் கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியால் தூண்டப்பட்ட மின் தடைகள் என இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.
முன்னதாக ஏப்ரல் 1 ஆம் தேதி, ராஜபக்சே தனது இல்லத்திற்கு எதிரே நடந்த மக்கள் போராட்டத்திற்குப் பிறகு அவசரநிலையை அறிவித்தார். பின்னர் ஏப்ரல் 5ம் தேதி அதை ரத்து செய்தார்.
அவசரகாலச் சட்டம், தன்னிச்சையாக மக்களைத் தடுத்து நிறுத்துவதற்கும், கைது செய்வதற்கும் கூட பாதுகாப்புப் படையினருக்கும் காவல்துறைக்கும் அதிகாரத்தை அளிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“