இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான அர்ப்பணிப்புகளில் இலங்கையிடம் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" இல்லாதது குறித்து கவலை தெரிவித்த இந்தியா, 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கும் முன் கூட்டியே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் "உடனடி மற்றும் நம்பகமான நடவடிக்கைக்கு" திங்களன்று இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான OHCHR இன் அறிக்கை மீதான காணொலி வாயிலான கலந்து உரையாடலின் போது, மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் ஐநா சாசனத்தின் கொள்கைகளின்படி வழிநடத்தப்படும் ஆக்கபூர்வமான சர்வதேச உரையாடல் மற்றும் ஒத்துழைப்பிற்கான அரசுகளின் பொறுப்பை எப்போதும் நம்புவதாக இந்தியா கூறியது.
இதையும் படியுங்கள்: பாகிஸ்தான் வெள்ள நிலவரம்; இரட்டை கோபுர தாக்குதல் – நாசா புகைப்படம் வெளியீடு… உலக செய்திகள்
இந்த உரையாடலில் பேசிய இந்திய பிரதிநிதி ஒருவர், அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம், மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்குவது மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துதல் போன்ற இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்விற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்புகளில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" இன்மை குறித்து கவலையுடன் குறிப்பிட்டார்.
"இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த இந்தியாவின் நிலையான பார்வையானது, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வகையில், ஐக்கிய இலங்கையின் கட்டமைப்பிற்குள் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதாகும்" என்று இந்திய இராஜதந்திரி கூறினார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது கடனால் உந்தப்பட்ட பொருளாதாரத்தின் வரம்புகளையும் அது வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் நிரூபித்துள்ளது என்று இந்திய பிரதிநிதி கூறினார்.
"இலங்கையின் குடிமக்களின் திறனைக் கட்டியெழுப்புவதும், அவர்களின் அதிகாரமளிப்பை நோக்கிச் செயல்படுவதும் இலங்கையின் சிறந்த நலன்களாகும், இதற்கு அடிமட்ட மட்டத்திற்கு அதிகாரப் பகிர்வு ஒரு முன்நிபந்தனையாகும்" என்று இந்திய இராஜதந்திரி கூறினார்.
இது தொடர்பில், முன்கூட்டியே தேர்தல்களை நடத்துவதன் மூலம் மாகாண சபைகளை செயற்படுத்துவது இலங்கையின் அனைத்து குடிமக்களும் வளமான எதிர்காலத்திற்கான அவர்களின் தேவைகளை அடைய உதவும்.
"எனவே இலங்கை உடனடி மற்றும் நம்பகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று இந்திய பிரதிநிதி கூறினார்.
13வது திருத்தச் சட்டம் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்குகிறது. 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஆளும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் (SLPP) சிங்கள பெரும்பான்மை கடும்போக்காளர்கள், 1987 இல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் மாகாண சபை முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.