Sri Lanka imposes curfew: நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சரியாக கையாளாத காரணத்தை மேற்கோள்காட்டி இலங்கை மக்கள் கொழும்புவில் பல்வேறு முக்கிய பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர். போராட்டங்கள் வன்முறையாக மாறிய சூழலில் ஊரடங்கு உத்தரவை பல்வேறு பகுதிகளில் பிறப்பித்தது இலங்கை அரசு.
கொழும்பு புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டிற்கு முன்பு வியாழக்கிழமை மாலை போராட்டக்காரர்கள் குவிந்தனர். போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும் மற்றும் நீரைப் பாய்ச்சியும் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
மூத்த எஸ்.பி. அமல் எதிரிமன்னே, கொழும்பின் நான்கு காவல்துறை மண்டலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
ஹெல்மெட் அணிந்த சில போராட்டக்காரர்கள் சுவரை இடித்து காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பிறகு கோத்தபய ராஜபக்சேவின் வீட்டிற்கு செல்லும் வழியில் நின்றுகொண்டிருந்த பேருந்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அதனை தீயிட்டு கொளுத்தினர்.
22 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள நாட்டில், போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால் எரிபொருள் இறக்குமதியில் பற்றாக்குறை ஏற்பட்டு, நாள் ஒன்றுக்கு 13 மணிநேரம் வரை மின்சாரத்தடை நிலவி வருகிறது.
இலங்கை அரசு இந்த நெருக்கடியை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சர்வதேச நாணய நிதியம் வருகின்ற நாட்களில் சாத்தியமான கடன் திட்டம் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் என்று வியாழக்கிழமை செய்தி தொடர்பாளர் ஒருவர் அறிவித்தார்.
நாட்டில் நிலவி வரும் தொடர் டீசல் தட்டுப்பாடு காரணமாக அதிக மின் வெட்டு நிலவி வருவதோடு பிரதான பங்கு சந்தையில் வர்த்தகமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சாரத்தை சேமிக்க இலங்கை அரசு தெரு விளக்குகளின் பயன்பாட்டு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மின்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் இந்த மின் தடை மேலும் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 18.7% ஆக இருந்தது என்று புள்ளியியல் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த வருடமும் இதே நிலையில் பணவீக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 30.2%ஐ எட்டியது. இது பணத்தின் மதிப்பு குறைவு மற்றும் கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட செயற்கை உரங்களுக்கான இறக்குமதி தடை ஆகியவற்றால் அதிகரித்தது. பின்பு செயற்கை உரங்களுக்கான தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் மிக மோசமான நிலையில் தற்போது உள்ளது என்று ஃபர்ஸ்ட் கேபிடல் ரிசர்ச்சின் டிமந்த மேத்யூ கூறினார்.
இந்தியாவிடம் இருந்து பெற்ற 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை வைத்து பெறப்பட்டிருக்கும் டீசல் சனிக்கிழமை இலங்கை வந்தடையும் என்று குறிப்பிட்ட பவித்ரா, இதன் மூலம் தீர்வு எட்டப்படாது என்றும் அறிவித்துள்ளார்.
அது வந்தவுடன் மின்சார தடையை குறைக்க முயல்வோம். மே மாதத்தில் பருவமழை துவங்கும். அதுவரை மின் தட்டுப்பாடு நிலவும். இதற்கு மேல் எங்களால் ஏதும் செய்ய இயலாது என்று அவர் கூறினார்.
நீர் மின்நிலையங்கள் மூலம் எடுக்கப்படும் மின்சாரத்தின் அளவும் குறைந்துள்ளது. வரலாறு காணாத அளவிற்கு நீரின் மட்டம் நீர் தேக்கங்களில் குறைந்திருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
தரகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த வாரம் முழுவதும் மின்வெட்டு இருப்பதால், கொழும்பு பங்குச் சந்தை (CSE) தினசரி வர்த்தகத்தை இரண்டு மணி நேரமாகக் குறைத்தது. வழக்கமாக நான்கரை மணி நேரம் வர்த்தகம் அங்கே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வியாழன் அன்று சந்தை துவங்கிய பிறகு பங்குகள் சரிந்தன. மேலும் கொழும்பு வர்த்தக சந்தை 30 நிமிடங்களில் தங்களின் வர்த்தகத்தை நிறுத்தியது. இரண்டு நாட்களில் இது மூன்றாவது முறையாக நடைபெறும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil