இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடித்து வருகிறது. எரிபொருள் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பட்டிகாலோவா பகுதியைச் சேர்ந்த வாணி சூசை என்கிற 31 வயது பள்ளி ஆசிரியர் கூறுகையில், “ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை எரிவாயு உருளை தீர்ந்துவிட்டது. உடனடியாக எரிவாயு உருளை ஏஜென்சிக்கு போன் செய்தேன்.
ஆனால், அவர்கள் அடுத்த சில நாட்களுக்கு எரிவாயு உருளையை டெலிவரி செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். கடைசியாக ஒரு கடையில் சிலிண்டர் வாங்கினேன்” என்கிறார்.
அவர் மேலும் கூறியதாவது:
இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் சிலிண்டர் காலியானது. மறுபடியும் அங்கே சென்றேன். ஆனால், பொதுமக்கள் காலை 4 மணி முதலே வரிசையில் நிற்கின்றனர்.
ஒரே நேரத்தில் 300 டோக்கன்களை அவர்கள் வினியோகிக்கின்றனர். ஆனால், வரிசையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். வேலைக்குச் செல்லும் பெண்ணா இருக்கும் நான், எப்படி வரிசையில் காத்துக் கொண்டிருக்க முடியும். எனது கணவர் அரபு நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு சென்றுவிடுவேன்.
நான் எனது மகள்கள் வசித்து வருகிறோம். மாதம் ரூ.30,000 எங்களுக்குத் தேவைப்படும். ஆனால், பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, மாதம் ரூ.83,000 தேவைப்படுகிறது. பால் பவுடருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசி, பருப்புக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
12 பாராசிட்டமல் மாத்திரை ரூ.420 ஆக அதிகரித்துள்ளது. எனக்கு மாத வருமானம் ரூ.55,000. மீதி செலவுக்கு கணவர் பணம் அனுப்புகிறார். நாங்கள் பணத்தையா சாப்பிட முடியும்? என்று விரக்தியுடன் கூறுகிறார் வாணி சூசை.
இதையும் படியுங்கள்: இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் பின்னணி என்ன?
இலங்கையில் பல் மருத்துவராக இருக்கும் டாக்டர் சமந்தா குமாரா கூறுகையில், வடமாகாணத்தில் வசித்து வருகிறேன். எனது மகன் ஆஸ்திரேலியாவில் படிக்கிறார். என்னால் தற்போது அவருக்கு பணம் அனுப்ப முடியவில்லை. அனைத்து டாலர் கணக்குகளும் முடக்கப்பட்டுவிட்டது என்கிறார்.
“கார்பென்டர் வேலைக்கு வந்துவிட்டேன். துபாய்க்கு செல்லலாமா அல்லது இந்தியாவுக்கு புகலிடம் தேடி வரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளில் 5 வேலைகளை மாற்றிவிட்டேன். ஆனாலும் என்னால் பொருளாதார பிரச்சனையிலிருந்து மீள முடியவில்லை.
என்னால் விறகு மட்டுமே எடுத்து வர முடியும். ஆனால், எனது மனைவிக்கு விறகு அடுப்பில் சமைக்கத் தெரியாது. மேலும், விறகு அடுப்பில் சமைத்தால் அதிக நேரம் எடுக்கும்” என்று இலங்கையில் டாக்சி டிரைவராக இருக்கும் ரகுமான் தஸ்லீம் கவலையைப் பகிர்ந்தார்.
கொழும்பில் தொழிலதிபராக இருக்கும் திலித் ஜெயவீரா கூறியதாவது:
டிவி சேனல், செய்தித்தாள், வானொலிகள் ஆகியவற்றை நடத்தி வருகிறேன். எனது தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
செய்தித்தாள்களின் பக்கங்களை குறைத்து விட்டோம். உயிர் காக்கும் மருந்துகளையும் எனது நிறுவனத்தால் இறக்குமதி செய்ய முடியவில்லை என்கிறார் ஜெயவீரா.
முன்னதாக, கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு 10 க்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தனர். 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு, கொரோனா இரண்டு அலைகள் பரவல் எதிரொலி ஆகியவற்றால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த இலங்கைக்கு, தற்போது உக்ரைன்-ரஷ்யா போர் பெரும் தலைவலியாக மாறிப் போயிருக்கிறது.
இவையெல்லாம் இலங்கையில் சுற்றுலாத் துறையை கடுமையாகப் பாதித்துள்ளது. இலங்கை சுற்றுலாத் துறையின் மூலம் கிடைக்கும் வருவாயையே பெருமளவில் நம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீவு நாட்டில் பெரும்பாலான பொருட்கள் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து போயிருப்பதால் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
Written by Arun Janardhanan
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil