இலங்கை அரசு இந்தியாவின் கடன் உதவியுடன் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாப்பாணம் முதல் தலைநகர் கொழும்பு வரை சொகுசு ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இந்த நிகழ்வை இந்திய இலங்கை உறவுகளில் மற்றொரு முக்கிய நிகழ்வு என்று அழைத்துள்ளது.
யாழ்ப்பாணம் முதல் கொழும்பு வரை தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் சுமார் 386 கி.மீ தொலைவு செல்கிறது. கொழும்பில் உள்ள கல்கிசை புறநகர் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுக புறநகர் வரையிலான பயணிகளுக்கு இந்த ரயில் சேவை பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவின் கடன் உதவியின் கீழ், இலங்கைக்கு ரயில் சேவைக்காக இந்தியா ஏசி டீசல் மல்டிபிள் யூனிட்களை (ஏசி டிஎம்யு) வழங்கியுள்ளது.
இந்தியாவின் கடன் உதவியுடன் யாப்பாணம் முதல் தலைநகர் கொழும்பு வரை சொகுசு ரயில் சேவையை இலங்கை அரசு தொடங்கியுள்ளது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் குறிப்பிடுகையில், “இந்திய இலங்கை உறவுகளில் மற்றொரு முக்கிய நிகழ்வு! டீசலில் இயங்குவதும் குளிரூட்டல் வசதிகொண்டதுமான பல்வகை ரயில் தொகுதி இந்திய கடனுதவியின்கீழ் RITES நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட நிலையில் அதன் சேவையை கௌரவ அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி அவர்கள் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். கல்கிசை முதல் காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவையினையும் ஆரம்பித்து வைத்த கௌரவ அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி அவர்கள்
இந்த ஆரம்ப ரயில் சேவையில் பயணித்த நிலையில் அமைச்சர் அவர்களை பிரதி உயர் ஸ்தானிகர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் வரவேற்றார்.” என்று தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்தியாவின் துணை தூதர் வினோத் கே ஜேக்கப் “இந்த ரயில் சேவை மக்களிடையே பரிமாற்றத்தை எளிதாக்கும். இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும்” என்று கூறினார்.
இந்தியா அளித்த ஆதரவுக்கு போக்குவரத்து அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆராச்சி நன்றி தெரிவித்தார்.
இலங்கையில் இந்தியா மேற்கொண்ட பல ரயில்வே திட்டங்களில் ஏசி டிஎம்யுக்கள் வழங்குவதும் ஒன்று என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மற்ற திட்டங்களில் தற்போது இந்திய கடன் உதவியின் கீழ் பயணிகள் பெட்டிகள் வழங்கும் திட்டமும் அடங்கியுள்ளது.
இந்த திட்டம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கையில் இந்தியாவின் மொத்த வளர்ச்சித் திட்டம் அதிகாரப்பூர்வமாக 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உள்ளது. இதில் சுமார் 570 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வெறும் மானியத் திட்டங்கள்” என்று கூறியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.