இலங்கை அரசியலில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், வரும் 14 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பு:
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை, அதிபர் மைத்ரி பால சிறிசேனா நீக்கினார். மேலும் மகிந்தா ராஜபக்சே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, ராஜபக்சேவை பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியாது என, ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், நேற்று அதிபர் சிறிசேனா முன்னிலையில், ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 7 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். சட்டம் - ஒழுங்கு அமைச்சராக சுசில் பிரேமஜெயந்தும், சர்வதேச வர்த்தக அமைச்சராக பந்துல குணவர்த்தனவும் பதவியேற்றனர்.
இலங்கை நாடாளுமன்றம் வரும் 14ம் தேதி தான் கூட்டப்படும் என அமைச்சர் லட்சுமண் யபா தெரிவித்திருந்தார்.வருகிற 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடவிருக்கும் போது, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறபோவதாக தகவல்கள் வெளியாகியது.
இந்தநிலையில் இதுகுறித்து நேற்று (8.11.18) கொழும்புவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்நாட்டு அமைச்சர் லட்சுமன்யாப்பா, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பணிகள் எதுவும் வருகிற 14-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெறாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதே போல் நாடாளுமன்ற கூடும் தினத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிவிப்பு மட்டுமே இடம்பெறும் என்றும், 14ம் தேதிக்கு முன்னதாக நாடாளுமன்றம் கூட்டப்படாது என்றும் அமைச்சர் லட்சுமண் யபா தெரிவித்துள்ளார்.