sri lanka presidential election highlights sajith premadasa gotabaya rajapaksa - துப்பாக்கிச் சூடு... 80 சதவிகித வாக்குப்பதிவு - இலங்கை தேர்தல் ஹைலைட்ஸ்
இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
Advertisment
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் குணரத்னம், மக்கள் விடுதலை முன்னணியின் அநுர குமார திசநாயக்க, இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேரா, தேசிய மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் ராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா உட்பட மொத்தம் 35 பேர் போட்டியிட்டுள்ளனர்.
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. நாடு முழுவதும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று நாளை (நவ.17) முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இன்னும் அங்கு வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. முன் எப்போதும் இல்லாமல் இலங்கையில் சுமார் 35 வேட்பாளர்கள் அதிபர் பதவிக்காகப் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் 26 அங்குல நீளத்துக்கு வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் அச்சடிக்கப்பட்டுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரையில் முதல் விருப்பம், இரண்டாவது விருப்பம், மூன்றாவது விருப்பம் என்ற வரிசையில் வாக்களிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. ஒருவருக்கு மட்டும் வாக்களிக்க விரும்புபவர்கள், வேட்பாளருக்கு அருகில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்னத்தில் 'X' எனக் குறியிடலாம். அதுவே முதல் விருப்பமாக இருந்தால் முதல் வேட்பாளருக்கு அருகில் 1 என்றும் இரண்டாவது விருப்பமாக இருந்தால் இரண்டாவது வேட்பாளருக்கு அருகில் 2 எனவும் குறிப்பிட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின்போது, முதல் விருப்பமாக உள்ள வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை கணக்கிடப்படும். அதில் யார் ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளாரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். யாரும் 50% பெறவில்லை என்றால் இரண்டாம் மற்றும் 3-ம் இடங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதில் 50% பெற்றவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.
கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாச ஆகிய இருவருக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் கோத்தபய ராஜபக்சே முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர். சஜித் பிரேமதாச மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சராக உள்ளார்.
துப்பாக்கிச் சூடு:
இந்த நிலையில், இன்று காலை புட்டலம் பகுதியில் உள்ள மக்கள், அருகில் உள்ள மன்னார் மாவட்டத்துக்குச் சென்று வாக்களிக்க, சில பேருந்துகளில் பயணித்துக்கொண்டிருந்துள்ளனர். இரண்டு மாவட்டங்களுக்கும் இடையில், அதாவது பேருந்து சரியாக தந்திரிமளே (Thanthirimale) என்ற கிராமம் வழியாகப் பயணித்துக்கொண்டிருக்கும்போது, அங்கு மறைந்திருந்த மர்மக் கும்பல் சாலையின் நடுவில் எரிந்த வாகன டயரை ஓடவிட்டதாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்து அதிர்ந்த பேருந்து ஓட்டுநர், நடு வழியிலேயே வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போதும் யாரும் எதிர்பார்க்காத விதமாக அந்த மர்மக் கும்பல் பேருந்தை நோக்கி கற்கள் மற்றும் துப்பாக்கியால் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வாக்குப்பதிவு
இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு சதவீதம் ஒட்டுமொத்தமாக 80% வாக்குகள் பதிவாகியுள்ளது. சுமார் 15.9 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்றே வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. தபால் ஒட்டுகள் முதலில் எண்ணப்படுகின்றன, நாளை(நவ.17) முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.