இலங்கையில், ஈஸ்டர் பண்டிகை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அவர் இலங்கை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார்.
22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கையில், பெரும்பான்மையாக சிங்கள பௌத்தர்களும், சிறுபான்மையாக தமிழர்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் உள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சே நாளை அனுராதபுரத்தில் உள்ள ஒரு பௌத்த விகாரில் அவருடைய சகோதரர் மஹிந்த ராஜபக்சே பிறந்த நாளில் பதவியேற்கிறார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரர் மஹிந்த ராஜபக்சே அரசின் கீழ் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபய ராஜபக்சே, தமிழி பிரிவினைவாதிகளான தமிழீய விடுதலைப் புலிகளை போரில் தோல்வியடையச் செய்தார்.
70 வயதான கோத்தபய ராஜபக்சே பெரும்பான்மை சமூகத்தின் கோபம் மற்றும் அச்சங்களை நீக்கும் நோக்கத்தில் உலகம் முழுவதும் அதிகாரத்திற்கு வந்த தேசியவாத தலைவர்களில் ஒருவராகி உள்ளார்.
கோத்தபய ராஜபக்சேவின் சகோதரர்களும் முகிய பொறுப்புக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் சீனாவுடன் நெருக்கமாக இருப்பதைக் காணலாம். சீனா இலங்கையில் துறைமுகங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், மின் நிலையங்களைக் கட்டுவதற்கு பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது. ஆனால், இந்த திட்டங்கள் இலங்கைக்கு அதிக கடன் சுமைக்கு இட்டுச்சென்றன.
கோத்தபயா ராஜபக்சே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தெரிவித்த முதல் கருத்தில், ராஜபக்சே அனைவருக்கும் இணக்கமான வார்த்தையை தெரிவித்துள்ளார். அவர் அனைத்து இலங்கை மக்களின் இன, மத அடையாளங்களைப் பொருட்படுத்தாமல் ஒரு தலைவராக இருப்பார் என்று கூறியுள்ளார்.
“இலங்கைக்கான ஒரு புதிய பயணத்தை நாங்கள் மேற்கொள்ளும்போது, அனைத்து இலங்கையர்களும் இந்த பயணத்தின் ஒரு பகுதி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் பிரச்சாரம் செய்த அதே விதத்தில் கண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக மகிழ்வோம்”என்று கோத்தபய ராஜபக்சே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
2009 இல் பிரிவினைவாதிகளுக்கு எதிரான போரின் இறுதி கட்டங்களில் பரவலாக பொதுமக்களின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ராஜபக்சேவை தமிழ் அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. ராஜபக்சேவும் அவரது சகோதரர்களும் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம், ஹோட்டல்கள், தேவாலங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த தாக்குதல் மூலம் இலங்கையின் மற்றொரு பெரிய சிறுபான்மைக் குழுவான முஸ்லிம்களும் விரோதத்தை எதிர்கொண்டதாக கூறுகின்றனர்.
சனிக்கிழமை தேர்தலில் பாதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கோத்தபயா 50.7% வாக்குகள் முன்னிலை வகித்தார். அதே நேரத்தில் அவரது முக்கிய போட்டியாளரான சஜித் பிரேமதாசா 43.8% வாக்குகளைப் பெற்றார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தோல்வி
இலங்கையில் ஏப்ரல் மாதம் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பை அடுத்து இலங்கையர்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள தற்போதைய அரசாங்கத்தின் வீட்டுவசதி அமைச்சர் பிரேமதாச தோல்வியை ஒப்புக்கொண்டார்.
“கடுமையாக போராடினாலும், உற்சாகமான தேர்தல் பிரச்சாரத்தின் முடிவில், மக்களின் முடிவை மதிக்க வேண்டும். இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கோத்தபய ராஜபக்சேவை வாழ்த்துவது எனது பாக்கியம்” என்று சஜித் பிரேமதாசா கூறினார்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அதன் சுற்றுலாத் துறை வீழ்ச்சி அடைந்தது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை அதன் ஆழ்ந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து வெளியேற்ற புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு மில்லியன் கணக்கான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
அவரது வெற்றியில் சிங்கள ஆதிக்கம் மிகுந்த தெற்குப் பகுதிகளில் பெரும் ஆதரவு கிடைத்தது.
ஏழைகளுக்கு உதவுவதற்கான கொள்கைகள் குறித்து பிரச்சாரம் செய்த சஜித் பிரேமதாசா, சிறுபான்மை தமிழர்கள் அதிகம் உள்ள வடக்கு மற்றும் கிழக்கில் முன்னிலை வகித்தார்.
அவர் அனைத்து இலங்கை மக்களையும் ஒன்றாக அழைத்துச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தலில் தன்னை எதிர்த்தவர்களை குறிவைக்கக்கூடாது என்றும் கோத்தபய ராஜபக்சேவை வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள @GotabayaR அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
நம் இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவம் மிக்க நெருக்கமான உறவை வலுவாக்குவதற்காகவும் எமது பிராந்தியத்தின் அமைதி செழுமை மற்றும் பாதுகாப்பிற்காகவும் தங்களுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன்.— Narendra Modi (@narendramodi) November 17, 2019
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு என் வாழ்த்துகள். நம் இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவம் மிக்க நெருக்கமான உறவை வலுவாக்குவதற்காகவும் எமது பிராந்தியத்தின் அமைதி செழுமை மற்றும் பாதுகாப்பிற்காகவும் தங்களுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.