உலகமே கடந்த ஒன்றை ஆண்டுகளாக கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறது. கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்தாக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் பைசர், இந்தியாவின் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின், மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போன்றவை உலகின் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்று வருகின்றன.
இந்நிலையில், இலங்கையில் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி பெற்ற ஆறு பேருக்கு இரத்தம் உறைந்து இரத்தக் கட்டிகள் ஏற்பட்டுள்ளது. அவர்களில் மூன்று பேர் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வனியராச்சி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், தடுப்பூசி திட்டத்தை நிறுத்துவதாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
கொரோனா வைரஸை எதிர்க்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது தான் இந்த அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி.
இந்த தடுப்பூசியின் பொதுவான பக்க விளைவுகளாக, ஊசி போடும் இடத்தில் வலி, தலைவலி, சோர்வு, தசை அல்லது மூட்டு வலிகள், காய்ச்சல், சளி, குமட்டல் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதனை செலுத்திக் கொள்வதால் மேற்கூறிய பக்க விளைவுகள் மட்டுமல்லாமல் இரத்தக் கட்டிகள் ஏற்படுவதாக சில நாடுகள் தெரிவித்தன. இதனால் சில நாடுகளில் இந்த தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தற்போது இலங்கையிலும் இந்த தடுப்பூசியால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil