இலங்கை செல்லும் டூரிஸ்ட்களுக்கு இலவச விசா வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்டர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சரிந்த சுற்றுலாவை தூக்கி நிறுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் தெற்கு தென் கிழக்கு பகுதியில் குட்டித் தீவாக அமைந்திருக்கும் இலங்கை, சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. இலங்கையின் பிரதான வருமானம், சுற்றுலாவை நம்பியிருக்கிறது. உள்நாட்டுக் குழப்பங்களை முடித்து சுற்றுலாத் துறையில் மேம்பாடு கண்டு வந்த இலங்கைக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு பேரிடியாக அமைந்தது.
ஈஸ்டர் குண்டு வெடிப்பில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதன்பிறகு இலங்கை சுற்றுலாத்துறை தலை கீழ் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஏற்கனவே சுற்றுலா செல்ல பதிவு செய்திருந்த பலரும் தங்களது சுற்றுப் பயணத்தை ரத்து செய்தனர். இதைத் தொடர்ந்து சுற்றுலாவுக்காக புதிய சலுகைகளை இலங்கை அறிவித்திருக்கிறது.
புதன் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் அமரதுங்க, ‘இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசாவுக்காக எந்த கூடுதல் கட்டணமும் வசூலிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறோம். சுற்றுலாவை மேம்படுத்த இது உதவும். இந்த ஆண்டு ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது எங்கள் இலக்கு’ என கூறியிருக்கிறார் அவர்.
அழகிய கடற்கரை, மலைப் பகுதி என இயற்கை எழில் கொஞ்சும் இலங்கைக்கு அதிகம் பயணிக்கும் வெளிநாட்டவர் இந்தியர்கள்தான். எனவேதான் இந்தியாவை குறி வைத்து இலங்கை இலவச டூரிஸ்ட் விசா சலுகையை அறிவித்திருக்கிறது.