இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு வசதியாக இலங்கை அரசு ஒரு குழுவை நியமித்துள்ளதாக அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தெரிவித்தனர்.
இலங்கையில் 1984ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் போது, அங்கு வசித்த தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அதிகம் பேர் வந்தனர். இவர்கள் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவிற்கு அகதிகளாக வந்த மக்களை மீண்டும் நாடு திரும்புவதற்கு வசதியாக அந்நாட்டு அதிபரின் செயலாளர் சமன் ஏகநாயக் ஒரு குழுவை நியமித்துள்ளார். இலங்கையின் குடியேற்றத்துறை, நீதித்துறை, வெளியுறவுத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை பதிவாளர் ஜெனரல் துறையின் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் (OfERR) வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து இலங்கை அதிபர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையை சேர்ந்த சுமார் 58 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் தற்போது அகதிகளாக வசிக்கின்றனர். இவர்களில் தற்போது 3,800 மட்டுமே இலங்கை திரும்ப தயாராக உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெடிக்கடி நீடித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மக்கள் அரசுக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். மக்கள் போராட்டம் வலுத்ததையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளிநாடு தப்பிச் சென்றார். இந்தநிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பி உள்ளார். இதனால் அங்கு மீண்டும் போராட்டம் வெடிக்குமா என்ற அச்சம் நிலவுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil