கொரோனா நோய்த் தொற்று காரணமாக சரிவை சந்தித்த மீன் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில், இலங்கை முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில், மீனை பச்சையாக உண்டு காண்பித்தார்.
Advertisment
கடந்த மாதம், மீன் சந்தை ஒன்றில் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மாறியதையடுத்து, இலங்கையில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது.
"இலங்கையில் மீன்வளத் தொழிலில் உள்ளவர்கள் மீன்களை விற்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இலங்கை மக்கள் மீன் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். மீன்களால் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை நான் உணர்த்த விரும்புகிறேன். மீன்களின் ஊடாக கொரோனா நோய்த் தொற்று பரவாது. பயப்பட வேண்டாம் ”என்று திலீப் வேதராச்சி கூறினார்.
தற்போது, இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக செயல்பட்டு வரும் வேதராச்சி, கடந்த ஆண்டு ரணில் விக்ரமசிங்கே ஆட்சியில் மீன்வளத் துறை அமைச்சராக பணியாற்றினார்.
மீன் சந்தை மூடப்பட்ட காரணத்தினால், பல்லாயிரக்கணக்கான டன் மீன்கள் விற்கப்படாத சூழல் உருவாகியது. மேலும், மீன் வாங்குவதை மக்கள் அடியோடு நிறுத்தியதால் விலைகள் சரிந்தன.