/indian-express-tamil/media/media_files/2025/08/14/sri-lankan-minister-sundaralingam-pradeep-wishes-79th-indian-independence-day-tamil-news-2025-08-14-16-22-04.jpg)
79-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு, இந்திய வம்சாவழியை சேர்ந்த இலங்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
79-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு, இந்திய வம்சாவழியை சேர்ந்த இலங்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
எமது நட்பு மிகுந்த அயல்நாடான இந்தியாவின் 79வது சுதந்திர நன்னாளில் வாழ்த்துக்கள் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
ஏறக்குறைய முழு இந்தியாவும் பிரித்தானிய சாம்ராட்சியத்திற்கு அடிமைப்பட்டு அரசியல் தலைமைகளினதும் மக்களினதும் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் 1947ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 15ஆம் நாள் சுதந்திரமடைந்தது. பல மதத்தவர்களையும் சில ஆயிரக்கணக்கான மொழிகளையும் பேசும் பல இனத்தவர்களைக் கொண்ட இந்தியா 30க்கும் மேற்பட்ட மொழிவாரி மாநிலங்களையும் உலகிலே அதிக சனத்தொகைக்கொண்ட நாடாகவும் திகழ்கின்றது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இவ்வனைத்து மக்களும் ஒரு கொடியின் கீழ் ஒரே தலைமையில் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற்றது நம் அனைவருக்கும் ஒரு படிப்பினை ஆகும். அது மட்டுமல்லாது கடந்த 79 வருடங்களாக அனைத்து மக்களும் ஒற்றுமையாக செயல்பட்டு அரசியல், பொருளாதார, சமூக ரீதியாகவும், கலை கலாசாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என அனைத்து துறையிலும் படிப்படியாக முன்னேறி இன்று ஓர் வலுவான வல்லரசாக திகழ்கின்றது.
இந்தியாவுக்கும் எம் இலங்கைக்குமான பிணைப்பு நட்புறவு சுமார் 2600 ஆண்டுகளுக்கு மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது.
மதம், மொழி, கலை, கலாசாரம், பண்பாடு என பல்வேறு விடயங்களில் காணப்படும் பின்னிப் பிணைந்த நிலை இன்று வரை எமது வாழ்வியலில் தாக்கத்தை செலுத்துகின்றது. இந்நிலையில் இன்றைக்கு சுமார் 202 வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இலங்கை வந்து குடியேறியவர்களின் சந்ததியினர் பல இலட்சக்கணக்கில் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களின் நலன் கருதி இந்தியா வழங்கிவரும் பல்வேறு உதவிகளை நன்றியோடு நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.
குறிப்பாக கல்வி, சுகாதாரம், வீடமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் எம்மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.
இது தவிர ஒட்டுமொத்த இலங்கைக்கும் இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் இக்கட்டான சூழ்நிலையில் ஓடிவந்து உதவிக்கரம் நீட்டிய நிகழ்வுகள் ஏராளம். அவை அனைத்தையும் இதய சுத்தியோடு வரவேற்பதோடு எதிர்காலத்திலும் அவை தொடரும் என எதிர்பார்க்கின்றேன்.
79- வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய நாட்டின் அனைத்து அரசியல் தலைமைகள் மற்றும் முழு இந்திய மக்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் தூதுவர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனதார வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
இவ்வாறு இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.