இலங்கையின் மத்திய மாகாணத்தில், இந்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய ஹை கமிஷனர் ( பொறுப்பு) வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு அண்டை நாடு என்ற முறையில், இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன்படி, ஹாட்டன் பகுதியின் வெள்ளை ஒய்யா எஸ்டேட் பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் 50 வீடுகள் கட்டுமான திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில், இந்திய ஹை கமிஷனர் வினோத் ஜேக்கப், இலங்கை அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டைமான் மற்றும் ரமேஷ் பத்திராணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேயிலை எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக 14 ஆயிரம் வீடுகள், இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட உள்ளது. அதன்ஒருபகுதியாகவே, இந்த 50 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதேநேரத்தில் தான், தொண்டைமான் தொழிற்பயிற்சி மையத்தின் அடிக்கல்நாட்டு விழாவும் நடைபெற்றது.
இந்த புதிய பயிற்சி மையம், இந்திய அரசு நிதியுதவியாக வழங்கியுள்ள 199 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதுமட்டுமல்லாது, இந்த பயிற்சி மையத்திற்கு தேவைப்படும் மிஷின்கள், புதிய படிப்புகளுக்கான உபகரணங்கள், பர்னிச்சர்கள், வாகனங்கள் உள்ளிட்டவைகளும், இந்திய அரசின் நிதியுதவியிலேயே நிறைவேற்றப்பட உள்ளன.
இந்த பயிற்சி மையத்தின் மூலம், எண்ணற்ற இலங்கை இளைஞர்கள் தொழிற்பயிற்சி பெற்று வேலை சந்தையில் தங்களுக்கு ஏற்றதொரு துறையில் நுழைந்து தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள இயலும்.
இலங்கை இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்காக இந்திய அரசின் நிதியுதவியுடன் இலங்கை அரசு இந்த பயிற்சியை வழங்க உள்ளது.
இந்தியா, இலங்கைக்கு 560 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான நிதியுதவியை செய்ய முன்வந்துள்ளது. அதன்படி, இலங்கை இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில் திறன் பயிற்சி அளிக்கும் வகையில், 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.