ராஜபக்ஷேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்திருக்கிறது.
இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்கிரமசிங்கேவை அதிரடியாக நீக்கிய அதிபர் ஸ்ரீசேனா, அந்தப் பதவியில் முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவை நியமித்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷே, ஸ்ரீசேனா ஆகியோரின் கட்சிகளுக்கு மெஜாரிட்டி இல்லை.
யார் பிரதமர் என்பதை தீர்மானிப்பதற்கான ஓட்டெடுப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெற ராஜபக்சே, பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களுக்கு வலைவீசி வருகிறார். இந்த நிலையில் 15 எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு வாக்களிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இது தொடர்பாக இன்று மதியம் அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, “பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது நடுநிலை வகித்தால் அது ஜனநாயக விரோத செயலாக மாறிவிடும். எனவே ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்போம்” என்று தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்ஷே தோல்வியடையும் வாய்ப்பு இருக்கிறது.
இதற்கிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களில் ஒருவரான வியாழேந்திரன், ராஜபக்ஷே அணிக்கு தாவியிருக்கிறார். அவருக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதே ரீதியில் மேலும் சில தமிழ் எம்.பி.க்களை இழுக்க குதிரை பேர முயற்சி நடைபெறுவதாக தெரிகிறது.