இலங்கை நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வருகை சரிவடைந்துள்ளதன் காரணமாக, இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக இலங்கை வனவிலங்குகள் துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜின்சுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை சிறந்த சுற்றுலா நாடு ஆகும். இந்த நாட்டிற்கு உலகின் பலபகுதிகளில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் காரணமாக, சுற்றுலா அடியோடு சரிவடைந்தது. இதிலிருந்து மீள கடும்பிரயத்தனம் மேற்கொண்டோம். தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். இந்தாண்டு துவக்கத்திலிருந்து தற்போதுவரை 2.3 மில்லியன் வெளிநாட்டவர்கள், இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள் 3 மில்லியன் வெளிநாட்டவர்கள், இலங்கைக்கு சுற்றுலா வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் பொருட்டு, இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, விசா கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்களுக்கு முதல் 30 நாட்கள் இலவச விசா வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் இலங்கையில் தங்க நேர்ந்தால், அதற்குரிய விசா கட்டணத்தை அவர்கள் செலுத்தவேண்டி இருக்கும் என்று அமைச்சர் ஜான் அமரதுங்கா கூறியுள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.