ஸ்டீபன் ஹாக்கிங், எந்த நிலையிலும் ஒருபோதும் மனம் தளரக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டி இருக்கின்றார் என வைகோ புகழாரம் சூட்டினார்.
ஸ்டீபன் ஹாக்கிங் மரணம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஸ்டீபன் ஹாக்கிங், உலகப் புகழ் பெற்ற இயற்பியல் அறிஞர்! அவர் இன்று காலை இங்கிலாந்தில், அவரது இல்லத்தில் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன். கடினமான இயல்பியல் கல்வியைக் கற்பிப்பதில் எளிமை ஆக்கித் தந்தவர். அண்டவெளி அறிவியலை எளிய மக்களுக்கும் கொண்டு போய்ச் சேர்த்தவர்.
ஸ்டீபன் ஹாக்கிங், 21 வயதிலேயே நரம்புத் தாக்குதலால், உடல் இயக்கத்தை இழந்தார். கை, கால்கள் செயல் அற்றுப் போயின; பேச முடியாதவர் ஆனார். என்ற போதிலும், இவரது மூளையின் கட்டளைகளைப் பதிவு செய்யக்கூடிய கணினியைப் பொறியாளர்கள் உருவாக்கித் தந்தனர். அதன் துணையோடு ஆய்வுகளை நிகழ்த்தி, அண்டவெளி குறித்துப் புதிய புதிய கண்டுபிடிப்புகளை அறிவித்துக் கொண்டே இருந்தார். அவை அனைத்தும், அதுவரை இயற்பியல் அறிஞர்கள் கருதி வந்த கோட்பாடுகளை மாற்றிக் கொண்டே இருந்தன.
ஸ்டீபன் ஹாக்கிங் படைத்த, காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம் உள்ளிட்ட படைப்புகளும், கட்டுரைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கட்டுரைகளைப் படித்து இருக்கின்றேன்; இவரது நேர்காணல்களைத் தொலைக்காட்சியில் பார்த்து வியந்து இருக்கின்றேன்.
ஸ்டீபன் ஹாக்கிங் படைப்புகளைத் தமிழக மாணவர்கள் படித்துப் பயன் பெற வேண்டும். தன்னால் இயலவில்லை என்றபோதிலும், விண்வெளிக்குப் பறக்க வேண்டும் எனப் பெருவிருப்பம் கொண்டு இருந்தார். அது முடியும் என்று கருதினார். அவரது கனவு நிறைவேறவில்லை. ஆனால், அந்த நம்பிக்கையைக் கடைசிவரையிலும் கைவிடவில்லை.
எந்த நிலையிலும் ஒருபோதும் மனம் தளரக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டி இருக்கின்றார். நம் காலத்தில், நாம் பார்த்து வியந்த ஒப்பற்ற மேதை ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.