விண்வெளி சென்றுள்ள வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தான் செல்லும்போது, மீன் குழம்பும் ஒரு விநாயகர் சிலையும் எடுத்துச் சென்றது பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக புகழ் பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லிம்ஸ் 3-வது முறையாக விண்வெளிக்கு சென்றுள்ள நிலையில், நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் இணைந்து, போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தில் பயணம் செய்து, நேற்று முன்தினம் (ஜூன் 6) விண்வெளியை அடைந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனமான போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் என்ற இருவர் மட்டும் விண்வெளிக்கு செல்லக்கூடிய வகையில், ஒரு விண்வெளி ஓடத்தை உருவாக்கியுள்ளது, இந்த ஓடத்தின் சோதனை ஓட்டம், கடந்த மாதம் நடைபெற இருந்த நிலையில், இந்த ஓடத்தை தாங்கிச்செல்லும், அட்லாஸ் ராக்கெட் பழுது காரணமாக சோதனை ஓட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராக்கெட்டின் பழுது சரி செய்யப்பட்டதை தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தின் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர். இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் 3-வது முறையாக விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளார். 25 மணி நேர பயணத்திற்கு பிறகு ஜூன் 6-ந் தேதி ஸ்டார்லைனர் விண்வெளி ஓடம் விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், தன்னுடன் சுட சுட மீன் குழம்பு மற்றும் ஒரு பிள்ளையார் சிலையையும் எடுத்து சென்றுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள சுனிதா வில்லியம்ஸ், மீன் குழப்பு எடுத்துச்சென்றது தனது வீட்டில் இருப்பது போன்ற உணர்வை கொடுப்பதாகவும், பிள்ளையார் சிலை வைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் கடந்த முறை, விண்வெளி பயணம் மேற்கொண்டபோது தன்னுடன், சமோசா மற்றும் பகவத் கீதையின் பிரதியை எடுத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“