கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார் என்ற விவரத்தை சுவிஸ் வங்கி ஞாயிற்றுக் கிழமை (செப்.1) அளிக்க உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் சுவிஸ் நாடுகளுக்கு இடையேயான தகவல்கள் மாற்றம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை வெளியிட உள்ளதாக சுவிஸ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.
36 நாடுகளுடன் தகவல் பரிமாற்று ஒப்பந்தத்தில் ( Automatic Exchange of Information (AEOI) agreement) கடந்த ஆண்டு மட்டும் ஸ்விட்சர்லாந்து கையெழுத்துட்டுள்ளது. அதன்படி, இந்த வருடத்தில் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 73 நாட்டு கணக்கர்களின் தகவல்களை அந்தந்த நாட்டுடன் பகிர்ந்து கொள்ள உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சுவிஸ்நாட்டில் கறுப்பு பணம் பதுக்கி உள்ள இந்தியர்களின் விவரங்களை சுவிஸ் வங்கி நாளை ஒப்படைக்க உள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. 2018 ம் ஆண்டில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் விபரங்களை சுவிஸ் வங்கி நாளை அளிக்க உள்ளதாக அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டுடன் AEOI ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் போது சுவிஸ் நாட்டு பாராளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்தியாவிற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு நவம்பர் 2016ல் சுவிஸ் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு, டிசம்பர் 2017ல் அனுமதி பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.