தலிபான் ஆட்சி, இந்தியாவின் மனிதாபிமான ஆதரவை “தங்கள் சொந்த படைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பயன்படுத்தியது, உண்மையில் தேவைப்படும் மக்களுக்கு அல்ல” என்று ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணியின் தலைவர் அஹ்மத் மசூத் கூறுகிறார். இது தலிபான்களுக்கு எதிரான ஒரு முக்கிய அமைப்பு ஆகும்.
இப்பகுதியில் உள்ள ஒரு அறியப்படாத இடத்திலிருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், பஞ்ச்ஷீரின் சிங்கம் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற அஹ்மத் ஷா மசூத்தின் 33 வயது மகன் மசூத், “எனக்கு அதிகாரம் வேண்டாம், எனது போராட்டம் இப்போது நீதிக்கானது… எனது போராட்டம், நீதி மற்றும் சுதந்திரத்திற்கானது” என்றார்.
ஐநாவின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு 50,000 டன் கோதுமையை அனுப்பும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. ஆனால் தலிபான்கள், இந்தியாவின் மனிதாபிமான ஆதரவை தங்கள் சொந்த படைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பயன்படுத்தியுள்ளனர், உண்மையில் தேவைப்படும் மக்களுக்கு அல்ல என்று மசூத் கூறினார்.
அவர்கள் நியாயமான முறையில் உதவிகளை வழங்கவில்லை, மேலும் இனத்தின் அடிப்படையில் மற்ற பகுதிகளை விட, ஒரு பகுதிக்கு அதிகமாக கொடுக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் தலைவர் ஒருவர் தலிபான்கள் மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பது இதுவே முதல் முறை.
ஆப்கானிஸ்தான் மீண்டும் “இருண்ட யுகத்திற்கு” சென்றுவிட்டதாக கூறிய மசூத், அல்கொய்தா மற்றும் பிற பயங்கரவாத குழுக்களுக்கு தலிபான் புகலிடம் அளித்து வருவதாக கூறினார். “அவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
மேலும் அய்மன் அல் ஜவாஹிரியைக் கொன்ற அமெரிக்கத் தாக்குதலைப் பற்றிக் குறிப்பிடுகையில், தாக்குதலின் போது அல்கொய்தா தலைவர், மத்திய காபூலில் இருந்தது ஆச்சரியமானதல்ல என்றார்.
காபூலில் முறையான அரசாங்கம் இல்லை. எனவே பயங்கரவாத குழுக்களுக்கு, தலிபான்களின் ஆட்சி, பாதுகாப்பான புகலிடமாக இருக்கும். அவர்கள் செழிக்க, செயல்பட, ஆட்சேர்ப்பு என தங்கள் சொந்த இலக்குகளுக்கு ஆப்கானிஸ்தானை பயன்படுத்துகிறார்கள்.
தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து காஷ்மீரில் நிகழ்வுகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. தலிபான்களின் ஆட்சியின் கீழ் உள்ள ஆப்கானிஸ்தானுக்கும் காஷ்மீரில் வன்முறை அதிகரிப்பதற்கும், இந்த பயங்கரவாத குழுக்களின் வன்முறை அதிகரிப்பதற்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது. ஏனென்றால், தாலிபான்களைப் போலவே நாமும் இரத்தக்களரி மற்றும் பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்தால், நாமும் ஆதரிக்கப்படுவோம், ஒரு தீவிரவாத அரசாங்கத்தை நிறுவுவதில் வெற்றி பெறுவோம் என்ற சாத்தியத்தை அவர்கள் காண்கிறார்கள். தீவிரவாதம் பரவி வருவதால், அனைத்து முயற்சிகளையும் ஒன்றிணைத்து, அதை முறியடிப்பது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது என்று மசூத் கூறினார்.
1990களில் அவரது தந்தை அஹ்மத் ஷா மசூதின் வடக்குக் கூட்டணிக்கு மறைமுகமாக உதவியதாகக் கூறப்படும் போது, இந்தியாவின் அணுகுமுறையில் உள்ள வித்தியாசம் குறித்து கேட்டதற்கு, அணுகுமுறையில் உள்ள வித்தியாசம் தயக்கம் என்று நான் நினைக்கிறேன். இந்தியா இன்னும் நிலைமையை மதிப்பிடும் பணியில் உள்ளது என்றார்.
இந்த தயக்கம் ஆபத்தானது. இது மிகவும் தவறு. சித்தாந்தம் வேரூன்றுவதற்கு முன்பு அல்லது பயங்கரவாத குழு, ஒரு அடித்தளத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு நமக்கு உடனடி நடவடிக்கை தேவை.
நாங்கள் ஒரே பக்கத்தில் இருக்கிறோம் என்பதையும், என் தந்தையின் அதே பாதையில் நாங்கள் தொடர்கிறோம் என்பதையும் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
எனவே, தயக்கம் எவ்வளவு சீக்கிரம் தீர்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் பிராந்தியத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வருவோம். நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் மக்களைப் பாதுகாக்கும் கடைசி வரிசையாக நாங்கள் இருக்கிறோம்.
“அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும்” இந்தியாவை அணுகியுள்ளதாகவும், அரசியல் ஆதரவு மற்றும் இராணுவ தளவாடங்களை நாடியதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு ஈரானில், வெளியுறவு மந்திரி அமீர் கான் மொட்டாகியை சந்தித்தபோது, தலிபான் அரசாங்கத்தில் தனக்கு ஒரு பதவி வழங்கப்பட்டதாகவும், அந்த வாய்ப்பை தான் நிராகரித்ததாகவும் மசூத் கூறினார்.
அவரது போராளிகள் எழுப்பிய எதிர்ப்பில், அவர்களில் சுமார் 3,500 பேர் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கிலிருந்து பரவி, ஹெராத், ஃபர்யாப், மசார், குண்டுஸ், பாக்லான், தகார் மற்றும் படக்ஷான் வரை விரிவடைந்து வருவதாகக் கூறினார்.
அவர்கள் ஒரு “கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை” உருவாக்கியுள்ளனர். “எங்களுக்கு வெளியில் இருந்து எந்த ஆதரவும் இல்லை. இது நமது சொந்த மக்களின் பெருந்தன்மை, அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ந்து எதிர்த்துப் போராடுவதற்கான விருப்பத்தின் அடிப்படையிலானது.
இந்த நேரத்தில் எங்கள் தந்திரோபாயம், அந்த நேரத்தில் சோவியத்துகளுக்கு எதிராக எனது தந்தை அஹ்மத் ஷா மசூத் கையாண்டதுதான், அது கொரில்லாப் போர்” என்று அவர் கூறினார். மசூதின் தந்தை அஹ்மத் ஷா மசூத், அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“