பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தமிழக வம்சாவளியை சேர்ந்த, உமா குமரன் என்பவர் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
5 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட பிரிட்டன் நடாளுமன்றத்தில் பிரதமர் ரிஷி சுனக்கின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2025) வரை இருக்கும் நிலையில், பொது தேர்தல் முன்கூட்டிய நடத்தப்படும் என்று அறிவித்த ரிஷி சுனக், கடந்த மே மாதம் ஜூலை 4-ந் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி நேற்று நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது
650 தொகுதிகள் கொண்ட பிரிட்டன் நாட்டில், 4 கோடி 60 லட்சம் வாக்காளர்களுக்காக நாடு முழுவதும் 46 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்திய நேரப்படி இரவு 10 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றதை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. இதில் தொடக்கம் முதலே தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்ற நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.
தற்போதைய நிலவரப்படி தொழிலாளர் கட்சி, 410 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 650 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட பிரிட்டனில் பெரும்பான்மை பெற 326 தொகுதிகளே போதுமானது என்ற நிலையில், தொழிலாளர் கட்சி 410 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 14 ஆண்டுகளுக்கு பிறகு தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
தொழிலாளர் கட்சியின் சார்பில் லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதுியில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த உமா குமரன், 19145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சியின் கேன் பிளாக்வெல் 3144 வாக்குகள் பெற்றுள்ளார். ஈழத்தை சேர்ந்த உமா குமரன், பிரிட்டன் வரலாற்றில் முதல் தமிழ் எம்.பி என்ற அடையாளத்தை பெற்றுள்ளார். கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன், அங்கு குயின் மேரி பள்ளியில் படித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“